கோடைக்கு ஏற்ற வாழைத்தண்டு சர்பத் தயாரித்து, தூத்துக்குடியை சேர்ந்த வாழை விஞ்ஞானி ஒருவர் பொதுமக்களுக்கு விநியோகித்து வருவது அப்பகுதியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பிரையண்ட் நகரை சேர்ந்தவர் முருகன். இவர் வாழை நாரில் இருந்து பட்டு நூல் பிரித்தெடுக்கும் கருவியை தயாரித்து புகழ் பெற்றவர். மத்திய, மாநில அரசுகளின் விருதுகளை பெற்ற இவர், தற்போது மருத்துவ குணம் கொண்ட வாழைத்தண்டு மூலம் சர்பத் தயாரித்துள்ளார்.
வாழைத்தண்டை துண்டுகளாக வெட்டி ரிவெர்ஸ் ஆஸ்மாசிஸ் பிராசஸ் முறையில் சர்க்கரை கலந்த கரைசலில் 48 மணி நேரம் ஊற வைத்து, அவற்றோடு, நன்னாரிவேர், எலுமிச்சை, இஞ்சி, ஏலக்காய் உள்ளிட்டவைகளை சேர்த்து சர்பத் செய்யலாம் என்று மக்களுக்கு விளக்கும் முருகன், நகரின் முக்கிய பகுதிகளில் பொதுமக்களுக்கு இலவசமாக அவற்றை விநியோகம் செய்து வருகிறார்.
கோடை காலத்திற்கு ஏற்ற வாழைத்தண்டு சர்பத்திற்கு, தூத்துக்குடி மக்கள் அமோக வரவேற்பு அளித்து வருகின்றனர்.