போர்ட் எலிசபெத்: விருதுபெற்ற கடலியல் ஆய்வாளரான ரெய்னர் ஸ்கிம்ப், ஒரு திமிங்கலத்தின் வாயில் சிக்கி, அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்துள்ளார்.
51 வயதான இந்த ஆய்வாளர், தென்ஆஃப்ரிக்காவின் போர்ட் எலிசபெத் கடற்பகுதியில் ஆய்வில் ஈடுபட்டிருந்தார். சார்டைன் எனப்படும் ஒருவகை மீன்கள், எப்படி கடலின் உணவு சுழற்சியில் பங்காற்றுகின்றன என்பதை ஆராய்வதே அவரது குழுவினரின் நோக்கம்.
இதுதொடர்பான வீடியோ பதிவுசெய்தல் மற்றும் உள்கடல் நீச்சல் போன்றவற்றில் ஈடுபட்டிருந்தனர். சார்டைன் எனப்படும் ஒரு மீன்வகை, திமிங்கலங்களுக்கு உணவாக இருப்பவை.
எனவே, அந்த மீன்கள் குறித்து ஆய்ந்து கொண்டிருந்தபோதுதான், அந்த மீன்களை உட்கொண்ட Bryde Whale என்ற ஒருவகையான திமிங்கலத்தின் வாயில், இவரது கால்கள், இரையோடு இரையாக சிக்கிக்கொள்ள, அவர் அப்படியே தொங்கினார்.
தன் இடுப்பைச் சுற்றி ஏதோ ஒரு அழுத்தத்தை உணர்ந்த அவர், நிகழ்ந்துள்ள ஆபத்தையும் அறிந்துகொண்டார். ஆனால், சில நொடிகளில் வித்தியாசத்தை உணர்ந்த அந்த திமிங்கலம், தன் வாயைத் திறந்து இவரை விடுவித்துவிட்டது.
இந்த அதிர்ச்சி சம்பவத்தை அவரது மனைவியும், புகைப்படக் கலைஞரும், தங்கள் படகிலிருந்து பேரதிர்ச்சியுடன் பார்த்துக் கொண்டிருந்தனர். இத்துறையில், 20 ஆண்டுகாலம் அனுபவமுடையவர் ரெய்னர் ஸ்கிம்ப் என்பது குறிப்பிடத்தக்கது.
– மதுரை மாயாண்டி