பெங்களூரு:
கர்நாடகா மாநிலம் பெங்களூரு கெங்கேரி பகுதியை சேர்ந்தவர் மகேந்திரன் (வயது 32). ஐடி ஆலோசனை நிறுவன ஊழியர். இவரது மனைவி சில்பா. இவர்களுக்கு 10 வயதில் ஒரு மகன் இருக்கிறான். கடந்த 3 மாதங்களுக்கு முன்பு மகேந்திரன் தனது மகனை சார்ஜரால் சராமரியாக அடித்துள்ளார்.
பொய் சொல்வாயா? என்று கேட்டு அடித்ததோடு, மகனை தூக்கி வீசியும், மிதித்தும் உள்ளார். வீட்டு பாடம் முடித்தல் மற்றும் டியூஷன் செல்லாமல் இருத்தல் போன்றவற்றில் அந்த சிறுவன் பொய் சொல்லியதாக தெரிகிறது. வலி தாங்காமல் துடித்த அந்த சிறுவன் இனி பொய் சொல்லமாட்டேன் என்று அழுது கதறினான்.
ஆனாலும் தொடர்ந்து அடித்த மகேந்திரன் சிறிது நேரம் கழித்து அடிப்பதை நிறுத்திவிட்டு சென்றுவிட்டார். மறுமுறை மகன் பொய் சொன்னால் இந்த காட்சியை காட்ட வேண்டும் என்பதற்காக தனது மனைவி செல்போனில் வீடியோ எடுக்கும் படி செய்துள்ளார். சில்பாவும் இதை வீடியோ எடுத்து செல்போனில் சேமித்து வைத்திருந்தார்.
சில தினங்களுக்கு முன்பு சில்பா தனது செல்போனை அப்பகுதியில் உள்ள கடையில் ரிப்பேர் செய்வதற்காக கொடுத்துள்ளார். அப்போது செல்போனில் பதிவாகியுள்ள வீடியோ, புகைப்படங்களை தனியாக சேமித்து வைக்கும் படி சில்பா தெரிவித்துள்ளார்.
அப்போது சிறுவனை அடித்த வீடியோவை பார்த்து அதிர்ச்சி அடைந்த கடைக்காரர் இது குறித்து கெங்கேரி போலீசில் புகார் செய்தார். இந்த வீடியோ சமூக வலை தளங்களிலும் வைரலாகியது. குழந்தைகள் பாதுகாப்பு மையத்துக்கு தகவல் கொடுக்கப்பட்டுள்ளது. போலீசார் மகேந்திரனை கைது செய்தனர். தற்போது அந்த சிறுவன் நலமுடன் உள்ளான்.