நாகர்கோயில்: கெட்டுப்போன இட்லி மாவு விவகாரத்தில் எழுத்தாளர் ஜெயமோகனை தாக்கியதாக கூறப்பட்ட கடை உரிமையாளர் செல்வம் காவல்துறையால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோயிலில் வசிக்கும் எழுத்தாளர் ஜெயமோகன், தன் வீட்டிற்கு அருகிலுள்ள கடையில் இட்லி மாவு வாங்கியதும், மாவு கெட்டுப்போயிருந்ததால் அதைத் திருப்பி கொடுக்க சென்றபோது, கடை உரிமையாளர் செல்வத்தோடு கை கலப்பு ஏற்பட்டதில், ஜெயமோகன் தாக்கப்பட்டதும் நாம் அறிந்ததே.

மேலும், ஜெயமோகனின் வீடு வரைவந்து, அவரின் குடும்பத்தினரையும் தரக்குறைவாக செல்வம் பேசியதாக குற்றம் சாட்டப்படுகிறது. அந்த செல்வத்திற்கு அரசியல் பின்புலம் இருப்பதாவும் கூறப்படுகிறது.

இதனையடுத்து, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஜெயமோகன் கொடுத்தப் புகாரின் அடிப்படையில், செல்வத்தின் மீது இபிகோ பிரிவு 294 (பி), பிரிவு 323 மற்றும் பிரிவு 506 (2) போன்ற பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.