அசாம் மாநிலத்தில் பாஜக தலைமையிலான அரசாங்கம், ஆக்கிரமிப்பாளர்களை வெளியேற்றும் முயற்சியைத் தொடங்கியிருந்தாலும், மாநிலத்தின் தேசிய பூங்காக்கள் மற்றும் வனவிலங்கு சரணாலயங்களில் கிட்டத்தட்ட 141 சதுர கி.மீ. வரை ஆக்கிரமிப்பாளர்கள் பிடியில் உள்ளது. மனிதனுக்கும் மிருகத்திற்கும் நடக்கும் மோதலில் கடந்த ஐந்து ஆண்டுகளில் 99 யானைகள் இறந்துவிட்டன. வியாழக்கிழமை அன்று கவுகாத்தி சட்டசபையில் நடந்த கேள்வி நேரத்தின் போது, அசாம் மாநில வன மற்றும் சுற்றுப்புற சூழல் அமைச்சர் பிரமிளா ராணி பிரம்மா, ஆக்கிரமிக்கப்பட்டுள்ள 141.76 சதுர கிமீ சரணாலயத்தின் நிலத்தில் 42 சதுர கிலோ மீட்டர் நிலம் 80 சதவீத தேசிய பூங்காக்களின் நிலம் என்று கூறியதோடு, வன தொடர்பான மற்ற புள்ளிவிவரங்களையும் வெளியிட்டார்.
ஐந்து தேசிய பூங்காக்களில், மனாஸ் தேசியப் பூங்காவில் 31 சதுர கி.மீ. ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது, நமேரி தேசியப் பூங்காவில் 5 சதுர கி.மீ., டிப்ரு-சைகோவா பூங்காவில் 3.17 சதுர கி.மீ. மற்றும் ஒராங் பூங்காவில் 2.35 சதுர கி.மீ., ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் பிரம்மா கூறினார். எனினும் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் காசிரங்கா தேசியப் பூங்காவில் அதிகாரிகள் ஆக்கிரமிப்பாளர்களை வெளியேற்றிய நடவடிக்கைக்குப் பிறகு அங்கு எந்த அத்துமீறலும் இல்லை.
அசாம் மாநிலத்தில் உள்ள 18 வனவிலங்கு சரணாலயங்களில், சோனாய்-ரூபாய் சரணாலயத்தின் 85 சதுர கிலோ மீட்டர் நிலம் ஆக்கிரமிப்பாளர்களின் பிடியில் உள்ளதால் அது அத்துமீறல் வரிசையில் முதலிடத்தில் உள்ளது என்று அமைச்சர் வெளியிட்டுள்ளார். கவுகாத்தியின் ஆம்சங்க் வனவிலங்கு சரணாலயத்தின் சுமார் 2.28 சதுர கி.மீ., புராசாபொரியின் 5.08 சதுர கி.மீ., லகொவாவின் மூன்று சதுர கி.மீ., பொர்னாடியின் நான்கு சதுர கி.மீ. மற்றும் பெர்ஜான்-பொர்ஜான்-படுமொனி வனவிலங்கு சரணாலயத்தின் 0.34 சதுர கி.மீ. ஆகியவை ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன என்று அமைச்சர் கூறினார்.
வனத்துறை அமைச்சர் மாநிலத்தில் மனிதனுக்கும் விலங்கிற்கும் நடக்கும் மோதல் பற்றிய புள்ளிவிவரங்களைக் கொடுத்த போது, 2012 ஆம் ஆண்டிலிருந்து 2016 ஆம் ஆண்டுக்கிடையே 99 காட்டு யானைகள் மின்சாரம், வேட்டை, நஞ்சு மற்றும் ரெயில் விபத்துக்கள் போன்ற சம்பவங்களின் காரணமாக இறந்துள்ளன என்று கூறினார். இதில் மின்சாரம் காரணமாக உயிரிழந்த யானைகளின் எண்ணிக்கை 48, ரயில் விபத்துக்களினால் 27, வேட்டையாடியதனால் 13 மற்றும் நஞ்சு காரணமாக 11 யானைகள் இறந்துள்ளன.
கடந்த ஐந்து ஆண்டுகளில் அசாம் மாநிலத்தில் 36 சிறுத்தைப்புலிகள் கொல்லப்பட்டுள்ளன, அதில் 27 சிறுத்தைப்புலிகளின் மரணம் “பழிவாங்கும் கொலைகள்”, அதாவது மனிதர்களின் வசிப்பிடத்தில் நுழைந்து, மனிதர்களுக்கும் வீட்டு விலங்குகளுக்கும் காயத்தையும் மரணத்தையும் ஏற்படுத்தியதின் விளைவாக அவை கொல்லப்பட்டன. வேட்டையாடியதினால் ஆறு சிறுத்தைகளும் நச்சினால் மூன்று சிறுத்தைகளும் உயிரிழந்தன என்று பிரம்மா கூறினார்.
மேலும் 2012 மற்றும் 2016 ஆம் ஆண்டிற்கு இடையே அசாம் மாநிலத்தில் 426 மனித இறப்புகள் காட்டு யானைகளினால் மட்டுமே ஏற்பட்டுள்ளது. 2015 இல் காட்டு யானைகளினால் 118 பேர் இறந்துள்ளதாக அமைச்சர் கூறினார். 2016 ல் 92 பேரை யானைகள் கொன்றதாகவும், 2012 ல் 84 பேரையும் 2013 ல் 81 பேரையும், 2014 ல் 51 பேரையும் யானைகள் கொன்றுள்ளது. ஆனால் 2016 ஆம் ஆண்டில் சிறுத்தைகள் ஒரு மனிதனைக் கொன்றுள்ளது. மற்றொரு கேள்விக்குப் பதிலளித்த, அமைச்சர் பிரம்மா, “இயற்கை” காரணங்களினால் 2016 ஆம் ஆண்டில் அசாம் மாநிலம் 101 ஒற்றைக் கொம்பு காண்டாமிருகங்களை இழந்துள்ளதாகக் கூறினார். இந்த “இயற்கை” மரணங்களில் காசிரங்கா தேசிய பூங்காவில் மட்டும் 93 மரணங்கள் நிகழ்ந்துள்ளதாகக் அவர் கூறினார்.