கொல்கத்தா: உத்திரப்பிரதேச மாநிலத்தில் பாரதீய ஜனதா கட்சிக்கு 17 இடங்கள் கிடைப்பதே கடினம் என ஆரூடம் தெரிவித்துள்ளார் மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி.

அவர் கூறியுள்ளதாவது, “கடந்தமுறை இம்மாநிலத்தில் 70 இடங்களைப் பெற்ற பாரதீய ஜனதாவுக்கு, இம்முறை 17 இடங்கள் கிடைப்பதே கடினம். காங்கிரஸ் கட்சிக்கு 7 முதல் 8 இடங்கள் வரை கிடைக்கலாம்.

அதேசமயம், பெரிய கூட்டணி அமைத்துள்ள சமாஜ்வாடி – பகுஜன் சமாஜ் கட்சிகள் இம்மாநிலத்தில் இந்தமுறை பெரிய வெற்றியைப் பெறும்” என்றார்.

கடந்தமுறை இம்மாநிலத்தில் பெற்ற பெரிய வெற்றியால், மத்தியில் மிக எளிதாக ஆட்சியமைத்தது பாரதீய ஜனதா. அந்த மாநிலத்தின் 80 இடங்களில், கணிசமானவற்றை கைப்பற்ற பல்வேறு கட்சிகளும் வியூகம் வகுத்து வருவது குறிப்பிடத்தக்கது.

மம்தா பானர்ஜி மேலும் கூறியுள்ளதாவது, “பிரதமர் மோடி தேர்தல் பிரச்சாரங்களில் வரம்பை மீறி பேசுகிறார். தான் ஒரு பிரதமர் என்பதை மறந்துவிட்டு பேசுகிறார். ஆனால், நான் ஒருபோதும் எனது எல்லையைத் தாண்டியதில்லை” என்றுள்ளார்.