புதுடெல்லி: ஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதல்வர் உமர் அப்துல்லா ஒரு நீண்ட சாம்பல்-வெள்ளை நிற தாடியுடன் இருக்கும் ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் வெளிவந்த சில மணி நேரங்களுக்குப் பிறகு, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி அதிர்ச்சியை வெளிப்படுத்தியதோடு, அப்துல்லாவின் தடுப்புக்காவல் துரதிர்ஷ்டவசமானது என்றும் கூறினார்.

அப்புகைப்படத்தை மேலும், ட்விட்டரில் பகிர்ந்ததுடன், “இந்த படத்தில் உள்ள உமரை என்னால் அடையாளம் காண முடியவில்லை.  நான் மிகவும் சோகமாக இருக்கிறேன்.  நமது ஜனநாயக நாட்டில் இவ்வாறு நடப்பது துரதிர்ஷ்டவசமானது. இது எப்போது முடிவுக்கு வரும்?“ என்று கருத்துத் தெரிவித்திருக்கிறார்.

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் 370 வது பிரிவு ரத்து செய்யப்பட்டதைத் தொடர்ந்து தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் முதல்வர் உமர் அப்துல்லா, ஜனவரி 15ம் தேதி, தனது அதிகாரபூர்வ இல்லத்திற்கு அருகிலுள்ள ஒரு வீட்டிற்கு மாற்றப்பட்டார்.

கடந்த 5 ஆகஸ்ட், 2019 அன்று 370வது பிரிவை மத்திய அரசு ரத்து செய்து ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தை, ஜம்மு-காஷ்மீர் மற்றும் லடாக் என இரண்டு யூனியன் பிரதேசங்களாகப் பிரித்த பின்னர் கைது செய்யப்பட்ட அவரது தந்தை ஃபாரூக் அப்துல்லா, முன்னாள் முதல்வர் மெஹ்பூபா முஃப்தி மற்றும் நூற்றுக்கணக்கான அரசியல், சமூக ஆர்வலர்கள், வழக்கறிஞர்கள் மற்றும் வணிகர்கள், ஆகியோருடன் உமரும் காவலில் இருந்தார்.

உமர், மெஹ்பூபா மற்றும் பிற அரசியல்வாதிகள் குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் 107 வது பிரிவின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். இது, அமைதிக் குலைப்பு மற்றும் பொது அமைதிக்குத் தொந்தரவு ஏற்படுத்தும் எந்தவொரு நபரையும் தடுப்புக்காவலில் வைக்க அதிகாரிகள் மற்றும் நிர்வாகக் குற்றவியல் நீதிபதி ஆகியோரை அனுமதிக்கிறது.