திருவனந்தபுரம்

கேரள நடிகைகள் பாலியல் புகார் சர்ச்சை குறித்து இதுவரை மவுனமாக இருந்த நடிகர் மம்முட்டி தற்போது கருத்து தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் கேரள திரைத்துறையில் நடிகைகளுக்கு எதிரான பாலியல் தொல்லை குறித்து ஓய்வு பெற்ற நீதிபதி ஹேமா தலைமையிலான குழு தாக்கல் செய்த அறிக்கையை மாநில அரசு வெளியிட்டது. பல நடிகைகள்,இந்த அறிக்கையை தொடர்ந்து நடிகர்கள், இயக்குநர்கள் மற்றும் தயாரிப்பாளர்களுக்கு எதிராக பாலியல் புகார்களை தெரிவித்தனர்.

மூத்த நடிகர்களான மும்முட்டி, மோகன்லால் உள்ளிட்ட நடிகர்கள் இந்த குற்றச்சாட்டுகளுக்கு எந்த கருத்தும் தெரிவிக்காமல் மவுனம் காத்து வந்த நிலையில், சமீபத்தில் நடிகர் மோகன்லால் கருத்து தெரிவித்திருந்தார். தற்போது, மலையாள திரையுலகை உலுக்கிய பாலியல் குற்றச்சாட்டுகள் தொடர்பாக நடிகர் மம்முட்டியும் கருத்து தெரிவித்திருக்கிறார்.

நடிகர் மம்முட்டி தனது சமூகவலைதள பக்கத்தில் வெளியிட்ட பதிவில்,

‘கேரள திரைத்துறையில் எந்த ஆதிக்க குழுவும் இல்லை. அம்மா அமைப்பின் அதிகாரபூர்வ அறிக்கை வெளியிடுவதற்காக காத்திருந்ததால், இதுவரை தனியாக கருத்து தெரிவிக்கவில்லை. சமூகத்தில் உள்ள அனைத்து பிரச்சினைகளும் திரைத்துறையிலும் உள்ளன. திரைத்துறையை சமூகம் உன்னிப்பாக கவனிப்பதால், சிறிய பிரச்சினையாக இருந்தாலும் பெரிய அளவில் சர்ச்சைக்கு உள்ளாகிறது. திரைத்துறையில் அசம்பாவிதம் நிகழாத வண்ணம் திரைத்துறையினர் கவனத்தோடும், விழிப்போடும் இருக்க வேண்டும்.

ஹேமா கமிட்டியின் அறிக்கையை வரவேற்கிறேன். அதன் பரிந்துரையை செயல்படுத்த அனைத்து அமைப்புகளும் வேறுபாடு இன்றி ஒற்றுமையாக நிற்க வேண்டிய நேரம் இது. பாலியல் புகார் தொடர்பாக போலீஸ் விசாரணை நடைபெறுகிறது. நீதிமன்றம் தண்டனையை முடிவு செய்யட்டும். ஹேமா கமிட்டியின் பரிந்துரைகளை செயல்படுத்த, சட்டத் தடைகள் இருந்தால் தேவையான சட்டம் இயற்ற வேண்டும்,”

என்று தெரிவித்துள்ளார்.