கொல்கத்தா
அமித்ஷா கலந்துக் கொண்ட சாலைப் பேரணியின் போது பாஜக நடத்திய வன்முறைக்கு எதிராக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி நடைபயணம் மேற்கொண்டார்.
மக்களவை தேர்தலின் கடைசிக் கட்ட வாக்குப்பதிவை ஒட்டி கொல்கத்தாவில் பாஜக தலைவர் அமித்ஷா ஒரு சாலைப்பேரணி நடத்தினார். இந்த பேரணியில் கடும் வன்முறை வெடித்தது. பாஜக மற்றும் திருணாமுல் காங்கிரஸ் தொண்டர்கள் ஒருவரை ஒருவர் தக்கிக் கொண்டார். கலவரத்தில் பல அரசு மற்றும் தனியார் சொத்துக்கள் சேதமடைந்தன.
வங்க அறிஞரான ஈஸ்வர சந்திர வித்யாசாகரின் சிலை இந்த கலவரத்தில் உடைக்கப்பட்டது. இது குறித்து திருணாமுல் காங்கிரஸ் மீது பாஜக குற்றம் சாட்டியது . திருணாமுல் காங்கிரஸ் இந்த தாக்குதலை பாஜக நடத்தியதாக புகார் அளித்து அதற்கான வீடியோ ஆதாரத்தையும் அளித்துள்ளது. வங்க அறிஞர் சிலை உடைப்புக்கு மேற்கு வங்க முதல்வர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
ஈஸ்வர சந்திர வித்யாசாகர் 19 ஆம் நூற்றாண்டை சேர்ந்தவர் ஆவார். அவர் விதவைகள் மறுமணத்துக்கு மிகவும் ஆதரவு அளித்த சீர்திருத்த வாதி ஆவார். பெண்கள் கல்விக்காக அவர் பல பள்ளிகளையும் கல்லூரிகளையும் அமைத்துள்ளார். அத்துடன் அவர் வங்க மொழி இலக்கிய வளர்ச்சிக்கு மிகவும் பாடுபட்டுள்ளார்.
நேற்று மேற்கு வங்க முதல்வரும் திருணாமுல் காங்கிரஸ் கட்சி தலைவருமான மம்தா பானர்ஜி பாஜகவின் வன்முறையை எதிர்த்து நடைபயணம் மேற்கொண்டர். கொல்கத்தாவின் இதயப்பகுதியில் உள்ள பெலியாகட்டா பகுதியில் அவர் தனது பயணத்தை ஆயிரக்கணக்கான கட்சி தொண்டர்களுடன் தொடங்கினார்.
இந்த ஆறு கிமீ தூர நடை பயணத்தில் திருணாமுல் கட்சி தொண்டர்கள் கட்சிக் கொடியை ஏந்தியபடி கலந்துக் கொண்டனர். மம்தாவின் நடைப்யணம் செல்லும் போது மேலும் பல கட்சித் தொண்டர்கள் இடையில் வந்து சேர்ந்துக் கொண்டனர். இந்த நடைபயணம் சாம் பஜாரில் முடிவடைந்தது.