மே.வங்க மாநிலம் ஹவ்ராவில் நேற்று பா.ஜ.க. தேர்தல் பிரச்சார பொதுகூட்டம் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் மத்திய அமைச்சர் அமீத்ஷா கலந்து கொண்டு பேசுவதாக இருந்தார்.

டெல்லியில் உள்ள இஸ்ரேல் தூதரகத்தில் குண்டு வெடித்ததால், தனது மே.வங்க பயணத்தை அமீத்ஷா ரத்து செய்தார்.

அவருக்கு பதிலாக ஹவ்ரா கூட்டத்தில் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி கலந்து கொண்டார்.

திரினாமூல் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி இரு நாட்களுக்கு முன்னர் டெல்லியில் அமீத்ஷா முன்னிலையில் பா.ஜ.க.வில் இணைந்த முன்னாள் அமைச்சர் ராஜிப் பானர்ஜி மற்றும் இரு எம்.எல்.ஏ.க்களும் கூட்டத்தில் பங்கேற்றனர்.

இந்த பொதுக்கூட்டத்தில் டெல்லியில் இருந்த படி, காணொலி காட்சி மூலம் பேசிய அமித்ஷா, மம்தா பானர்ஜியை கடுமையாக விமர்சித்தார்.

“முதல்-அமைச்சர் மம்தா பானர்ஜி, மே.வங்க மாநில நலனில் கவனம் செலுத்தாமல், தனது மருமகனை முதல் -அமைச்சராக்குவதை மட்டுமே ‘அஜெண்டாவாக’ வைத்து, செயல் படுகிறார்” என அவர் குற்றம் சாட்டினார்.

திரினாமூல் காங்கிரஸ் கட்சியில் இருந்து எம்.எல்.ஏ.க்கள் உள்ளிட்ட பல தலைவர்கள் சாரை சாரையாக விலகி பா.ஜ.க.வில் சேருவதை குறிப்பிட்ட அமித்ஷா, “இதே நிலை நீடித்தால், சட்டப்பேரவை தேர்தலின் போது, திரினாமூல் காங்கிரஸ் கட்சியில் மம்தா பானர்ஜி மட்டுமே தனி நபராக இருக்கப்போகிறார்” என விமர்சித்தார்.

– பா. பாரதி