மே.வங்க மாநிலத்தில் வரும் ஏப்ரல் மாதம் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது.

இந்த தேர்தலில் ஆளும் திரினாமூல் காங்கிரஸ் கட்சிக்கும், பா.ஜ.க.வுக்கும் இடையே போட்டி நிலவுகிறது.

அந்த மாநில முதல்-அமைச்சரும், திரினாமூல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி நடியாவில் நேற்று நடந்த தேர்தல் பிரச்சார கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார்.

அப்போது அவர் “மே.வங்க மாநிலத்தில் உள்ள கிராம புறங்களுக்கு தனி விமானத்தில் பறந்து வரும் பா.ஜக.வினர், விவசாயிகள் வீடுகளில் சாப்பிடுவதாக நாடகம் நடத்தி ஐந்து நட்சத்திர ஓட்டல்களில் இருந்து கொண்டு வரப்படும் உணவை அருந்தி செல்கின்றனர்” என குற்றம் சாட்டினார்.

“அமெரிக்க அதிபர் ட்ரம்புக்கும், பா.ஜ.க.வுக்கும் எந்த வித்தியாசமும் கிடையாது. தேர்தலில் தோற்ற பின்னரும் வெற்றி பெற்று விட்டதாக கூறுகிறார், ட்ரம்ப். அதுபோல் பா.ஜ.க.வும் தனது தோல்வியை ஒப்புக்கொள்வது இல்லை. ட்ரம்பும், பா.ஜ.க.வும் ஒரே நாணயத்தின் இரு பக்கங்கள்” என மம்தா சாடினார்.

“மத்திய அரசின் வேளாண் சட்டத்தை எதிர்த்து டெல்லியில் ஒரு மாதமாக போராடும் விவசாயிகள் பிரச்சினைக்கு தீர்வு காணாமல் அவர்கள் மீது மத்திய அரசு அடக்குமுறையை ஏவி விடுகிறது” என மம்தா மேலும் கூறினார்.

– பா. பாரதி