கொல்கத்தா: வெற்று வார்த்தைகளால் நிரம்பிய, ஆதாரமில்லாத வருமானங்களோடு, தவறாக வடிவமைக்கப்பட்ட பட்ஜெட் என்று மேற்கு வங்க முதலமைச்சர்மம்தா பானர்ஜி கடும் விமர்சனம் எழுப்பினார்.
நாடாளுமன்றத்தில் பட்ஜெட்டை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். பட்ஜெட் தாக்கல் முடிவடைந்ததும், பட்ஜெட் குறித்து பல்வேறு தலைவர்களும் கருத்து தெரிவித்துள்ளார். மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார்.
இது குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் அவர் தெரிவித்திருப்பதாவது: எந்த வகையிலும் இருந்து வராத ஆதாரமற்ற நிதி கொண்டு, அடிப்படை காரணமற்ற, எந்த பயனுமில்லாத, இலக்கு இல்லாத வகையில் அரசு பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ளது.
எதிர்காலத்தில் இந்த அரசின் மீது மக்கள் வைக்கக் கூடிய நம்பிக்கையை இழந்துவிட்டது. வரி கட்டுபவர்களுக்கு, பணம் எடுப்பதற்கு இன்னமும் ஏன் கட்டுப்பாடுகள்? உடனடியாக அனைத்து கட்டுப்பாடுகளையும் நீக்குங்கள்.
பண மதிப்பிழப்பு நடவடிக்கையின் மூலம் நிகழ்ந்த மாற்றத்திற்கான ஆதாரங்கள் எங்கே? தவறான வழி காட்டுதலில், எந்த அர்த்தமும் இல்லாமல், முழுக்க முழுக்க வெற்று வார்த்தைகளால் நிரம்பிய பட்ஜெட் இது என்று விமர்சித்துள்ளார்.