கொல்கத்தா

குடியுரிமை சட்டம் இயற்றப்பட்டால் அது அமலாவதை நிறுத்த மம்தா பானர்ஜியால் முடியாது என மேற்கு வங்க பாஜக தலைவர் திலீப் கோஷ் கூறி உள்ளார்.

குடியுரிமை சட்டத்திருத்த மசோதா தாக்கல் செய்ததும் அதை முதலில் எதிர்த்தவர் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி ஆவார்.  அதன் பிறகு திருத்தப்பட்ட குடியுரிமைச் சட்டத்தை தங்கள் மாநிலத்தில் அமல்படுத்த முடியாது என எதிர்ப்புக் குரல் கொடுத்த மாநில முதல்வர்களில் மம்தாவும் ஒருவர் ஆவார்.  இதைப் போல் கேரள முதல்வர் மற்றும் பஞ்சாப் முதல்வர்களும் அறிவித்துள்ளனர்.

இது குறித்து மேற்கு வங்க மாநில பாஜக தலைவர் திலீப் கோஷ், “எந்த ஒரு மாநில அரசாலும் மத்திய அரசின் சட்டத்தை மீறி நடக்க முடியாது.   அதற்கு மம்தா பானர்ஜியோ அவரது திருணாமுல் காங்கிரஸ் அரசோ விதிவிலக்கு இல்லை.   மம்தா பானர்ஜி ஏற்கனவே விதி எண் 370 விலக்கல்,    பணமதிப்பிழப்பு ஆகியவற்றைக் கடுமையாக எதிர்த்தார்.   ஆனால் அவை அமலாக்கப்பட்டதை நிறுத்த அவரால் முடியவில்லை.

இந்த சட்டம் இயற்றப்பட்டவுடன் அமல்படுத்தப்படும் முதல் மாநிலமாக மேற்கு  வங்கம் இருக்கும்.   இந்த சட்டத்தை மம்தா பானர்ஜி ஏன் எதிர்க்கிறார்? மாநிலத்தில் உள்ள தனது வாக்கு வங்கி அடிபடும் எனப் பயப்படுகிறாரா?  அவர் சட்டத்தை தன் கையில் எடுத்துக் கொண்டு மக்களைக் கவர விரும்புகிறார்.   அவர் ஊடுருவல் பேர்வழிகளுக்கு காட்டும் கரிசனத்தைப் பல்லாண்டுகளாக அவதிப்படும் இந்து அகதிகளுக்கு காட்ட மறுக்கிறார்.  எனத் தெரிவித்துள்ளார்.