மும்பை

மாலேகான் குண்டு வெடிப்பு வழக்கு விசாரணையின் போது அதிகாரி ஹேமந்த் கர்கரே மிகுந்த மன உளைச்சலுடன் காணப்பட்டதாக அரசு வழக்கறிஞர் ரோகிணி சலியன் கூறி உள்ளார்.

மாலேகான் குண்டு வெடிப்பு வழக்கில் கைதான சாத்வி பிரக்ஞா தாகுர் தற்போது பாஜக சார்பில் போபால் தொகுதியில் போட்டியிட உள்ளார். அவர் சமீபத்தில் தன்னை கைது செய்த ஐ பி எஸ் அதிகாரி ஹேமந்த் கர்கரே மீது தாம் அளித்த சாபத்தால் அவர் மும்பை 26/11 தீவிரவாத தாக்குதலில் கொல்லப்பட்டதாக தெரிவித்தார். இது நாடெங்கும் சர்ச்சையை உண்டாக்கி இருக்கிறது.

இது குறித்து மாலேகான் குண்டு வெடிப்பு வழக்கில் கர்கரேவுடன் பணி ஆற்றிய அரசு வழக்கறிஞர் ரோகிணி சலியன், “இந்த வழக்கு விசாரணையின் போது ஹேமந்த் கர்கரே மிகுந்த மன உளைச்சலுடன் காணப்பட்டார். அவர் தீவிரவாதிகளால் கொல்லப்படுவதற்கு சில மணி நேரம் முன்பு அதாவது அன்று மாலை 7 மணிக்கு என்னை எனது அலுவலகத்தில் வந்து பார்த்தார்.

இருவரும் வழக்கு குறித்து பேசிக் கொண்டிருந்தோம். அப்போது நான் அவரிடம் அவரும் ஒரு இந்து எனவும் அவரது பணியை செய்வதே இந்து தர்மம் எனவும் கூறி சமாதானம் செய்தேன். மேலும் சாத்வி பிரக்ஞா வெடிகுண்டு வெடிப்புக்கு துணை சென்றதை தனது கடமையாக நினைக்கும் போது அவரை பிடிப்பது கர்கரேவின் கடமை என தைரியம் அளித்தேன். அடுத்த நாள் என்னை சந்திப்பதாக சென்றவர் அன்று இரவே மரணம் அடைந்தார்” என தெரிவித்துள்ளார்.

முன்னாள் மும்பை உயர் காவல் அதிகாரி ஜுலியோ ரெபைரோ, “நான் கர்கரே கொல்லப்படுவதற்கு ஒரு நாள் முன்பு அவரை சந்தித்தேன். அப்போது மூத்த பாஜக தலைவர் அத்வானி அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங் இடம் சாத்வியை கேள்விகள் கேட்டு துன்புறுத்தக் கூடாது என வேண்டுகோள் விடுத்தார். ஆனால் அதை மன்மோகன் சிங் மறுத்து விட்டார்.

இந்த நிகழ்வுகளால் கர்கரே மிகவும் கவலை அடைந்தார்.  நான் அவரிடம் எனக்கு அத்வானியை தனிப்ப்ட்ட முறையில் தெரியும் எனவும் நான் அவரிடம் இது குறித்து பேசுவதாகவும் கர்கரேவை சமாதானம் செய்தேன். ஆனால் காவல்துறை அதிகாரியான கர்கரே மீது அப்போது ஒருவரும் குற்றம் சொல்லவில்லை. அவருக்கு நல்ல மதிப்பும் மரியாதையும் இருந்தது.” என தெரிவித்துள்ளார்.