நியூயார்க்: ஐ.நா. சபைக்கான பாகிஸ்தானின் நிரந்தர தூதராகப் பணியாற்றிவரும் மலீஹா லோடி, ஒரு நிகழ்ச்சியில் பேசிக்கொண்டிருந்தபோது, பாகிஸ்தான் நாட்டவர் ஒருவரின் கடுஞ்சொற்களை எதிர்கொள்ள முடியாமல் அங்கிருந்து பாதியிலேயே வெளியேறும் நிலை ஏற்பட்டது.

இதுகுறித்து கூறப்படுவதாவது; ஐ.நா. அவை தொடர்பான ஒரு நிகழ்ச்சியில் மலீஹா லோடி பத்திரிகையாளர்களிடம் பேசிக்கொண்டிருந்தபோது, கோபம் கொண்ட ஒரு பாகிஸ்தான் நாட்டவர், லோடியை நோக்கி கேள்விகளை வீசினார்.

ஆனால், லோடியோ அக்கேள்விகளை தவிர்த்து, அம்மனிதனை பேசாமல் இருக்கும்படி கூறினார். ஆனால், தொடர்ந்து பேசிய அந்த மனிதர், “கடந்த 15 முதல் 20 ஆண்டுகளாக நீங்கள் எங்களுக்காக செய்தது என்ன? நீங்கள் எங்களின் பிரதிநிதியாக செயல்படவில்லை.

நீங்கள் எங்களுடைய பணத்தை திருடுகிறீர்கள். நீங்கள் திருடர்கள் என்பதால், எங்களைப் பிரதிநிதித்துவம் செய்ய உங்களுக்கு அருகதை இல்லை. உங்களுக்கு வெட்கமாக இல்லையா? இத்தனை ஆண்டுகளாக எங்கள் பணத்தை விழுங்கிக்கொண்டு இருக்கிறீர்களே? என்று ஆவேசமாக பேசிய அந்த மனிதரை அங்கிருந்த வேறுசிலர் ஆசுவாசப்படுத்தினர்.

இந்த சம்பவத்தையடுத்து, மலீஹா லோடி நிகழ்ச்சியிலிருந்து பாதியிலேயே புறப்பட்டுச் சென்றார்.