லண்டன்:  2016 ஆம் ஆண்டில் மாலேவில் ஏற்பட்ட அரசியல் கொந்தளிப்பின் உச்சத்தில் காமன்வெல்த்திலிருந்து வெளியேறிய மாலத்தீவுகள், 2018 ல் இப்ராஹிம் முஹம்மது சோலிஹ் அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டதைத் தொடர்ந்து மீண்டும் அமைப்பில் சேர விண்ணப்பித்து, அது ஏற்றுக்கொள்ளப்பட்டதாக அதிகாரபூர்வ வட்டாரங்கள் தெரிவித்தன.

காமன்வெல்த் அமைப்பின் 54வது உறுப்பினர் நாடாக மாலத்தீவுகள் சேர்ந்துள்ளது. இது, டிசம்பர் 2018ல் மாலத்தீவுகளின் புதிய அதிபர், காமன்வெல்த் அமைப்பின் பொதுச்செயலாளர் பட்ரீஷியா ஸ்காட்லாண்ட் க்கு, அமைப்பில் மீண்டு இணைவது குறித்து எழுதிய கடிதத்தில் தொடங்கிய செயல்முறையின் முடிவைக் குறிக்கிறது.

கம்பாலாவில் 2007ஆம் அண்டில், காமன்வெல்த் அரசாங்கத் தலைவர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்ட விதிமுறைகள் மற்றும் நடைமுறைகளுக்கு ஏற்ப நாட்டின் மதிப்பாய்வு மற்றும் உரையாடல்களை உள்ளடக்கிய, விடாமுயற்சிக்குப் பிறகு, மாலத்தீவுகள் மீண்டும் சேர்த்துக்கொள்ளப்பட்டதாக, லண்டனில் அமைந்துள்ள அதன் செயலகம் அறிவித்துள்ளது.

லண்டனில், ஜூலை 2019ல் நடைபெற்ற 19வது காமன்வெல்த் வெளியுறவு அமைச்சர்கள் கூட்டத்தின் போது இந்த செயல்முறையை விரைவுபடுத்த, இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் அழைப்பு விடுத்தபோது, மாலத்தீவின் மறு சேர்க்கைக்கு இந்தியா தனது ஆதரவை அளித்தது.

மாலத்தீவுகளின் அதிபராக இப்ராஹிம் முஹம்மது சோலிஹ் தேர்ந்தெடுக்கப்பட்டதை இந்தியா வரவேற்றது. மோடி மீண்டும் பிரதமராக பதவியேற்ற பின்னர் விஜயம் செய்த முதல் நாடு மாலத்தீவுகள் ஆகும்.

“இன்று மாலத்தீவு மக்களுக்கு மகிச்சியான நாள். ஒரு இளம் ஜனநாயக நாடு என்ற வகையில், மனித உரிமைகள், நல்லாட்சி, பலதரப்பு மற்றும் உலக அமைதி ஆகியவற்றை மேம்படுத்துவதற்கான அடிப்படை மதிப்புகள் முன்னெப்பொழுதையும் விட எங்களுக்குப் பொருத்தமாக இருக்கின்றன“, என்று அதிபர் இப்ராஹிம் முஹம்மது சோலிஹ் கூறினார்.