தூத்துக்குடி:

தூத்துக்குடி அருகே நடுக்கடலில் கைது செய்யப்பட்ட மாலத்தீவு முன்னாள் துணை அதிபர் அகமது ஆதீப் திருப்பி அனுப்பப்பட்டார். நேற்று இரவு மீண்டும் மாலத்தீவிடமே ஒப்படைக்கும் வகையில் நாடு கடத்தப்பட்டார்.

மாலத்தீவில் அரசு கஜானாவில் ரூ.700 கோடி பணம் கையாடல் செய்யப்பட்டது தொடர்பான வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த முறைகேடு வழக்கில் முன்னாள் அதிபர் அப்துல்லா யாமின், முன்னாள் துணை அதிபர் அகமது ஆதீப் சேர்க்கப்பட்டுள்ளார். ஏற்கனவே விசாரணைக்கு ஆஜரான  அப்துல்லா யாமின் திடீரென சிறை வைக்கப்பட்ட நிலையில், அகமது ஆதீப்பும் சிறை வைக்கப்படலாம் என தகவல்கள் வெளியானது. இதற்கிடையில்,விசாரணைக்கு ஆஜராகும்படி அந்நாட்டு காவல்துறையினர் அவருக்கு சம்மன் அனுப்பியிருந்தனர். ஆனால் அவர் திடீரென மாயமாகிவிட்டார்.

இதையடுத்து,  கடந்த 27-ந்தேதி மாலத்தீவில் இருந்து தூத்துக்குடிக்கு புறப்பட்ட  இழுவை கப்பல் மூலம் அகமது ஆதீப் இந்தியா வர முயற்சி மேற்கொண்டார். இந்த ‘விர்கோ-9’ என்ற இழுவை கப்பல் இமாலத்தீவை சேர்ந்த முராய்ப் என்பவருக்கு சொந்தமானது. கமலில் அகமது ஆதீப் ஏறிய விவகாரம் குறித்து  தூத்துக்குடி கடலோர காவல் படைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து உஷாரான இந்திய கடற்படையினர், இழுவை கப்பலை  தூத்துக்குடி கடல் பகுதியில் வந்தபோது வழிமறித்து நிறுத்தினர்.  அங்கு மறைந்திருந்த மாலத்தீவு முன்னாள் துணை அதிபர் அகமது ஆதிப்பிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தினர். இதுகுறித்து மத்திய அரசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

இந்தியா மாலத்தீவு நாடுகள் நட்பு நாடாக உள்ளதால்,  இழுவை கப்பலை அங்கிருந்து செல்லாமல் நிறுத்தி வைக்குமாறும், கப்பலில் இருந்து அகமது ஆதீப்பை கீழே இறக்க வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டது. இதனால் அகமது ஆதீப் தொடர்ந்து இழுவை கப்பலிலேயே பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டு இருந்தார்.

இதற்கிடையில்,  ஆதீப்புக்கு உதவ லண்டனில் உள்ள சர்வதேச சட்ட உதவி மையம்  லண்டனில் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், அப்துல் ஆதீப் தஞ்சம் அடையும் நோக்கத்துடனேயே இந்தியாவுக்கு பயணித்துள்ளார் என்றும், ஆனால் ஆதீப்பை  அரசியல் தஞ்சம் அடைய விடாமல் மாலத்தீவு போலீஸ் தடுப்பதாக குற்றம் சாட்டியது.

இந்நிலையில் தூத்துக்குடி பழைய துறைமுகத்தில் இந்திய அதிகாரிகள் இது தொடர்பாக மாலத்தீவி நாட்டு அதிகாரிகளிடமும்  பேசி வந்தனர்.  அதன்பிறகு ஆதீப்பிடம் இந்திய குடியுறவுத்துறை மற்றம் புலனாய்வுத்துறைஅதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர்.

அதன் முடிவில், இந்திய மண்ணில் ஆதீப் காலடி வைக்க அனுமதி மறுக்கப்பட்டு,  மீண்டும் மாலத்தீவுக்கே நாடு கடத்தப்பட்டார்.  அவர் ஏறி வந்த இழுவை கப்பலிலேயே  அவரை அழைத்துச்சென்று  சர்வதேச எல்லையில் மாலத்தீவு கப்பற்படையின ரிடம், இந்திய கப்பற்படையினர் ஒப்படைத்தனர்.

அவர் மாலத்தீவு கடற்படையினரிடம் ஒப்படைக்கப்படும் வீடியோ வெளியாகி உள்ளது.