மலேசியப் பிரதமர் அன்வார் இப்ராகிம் வெள்ளிக்கிழமையன்று (அக்டோபர் 18) 2025ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்ட அறிக்கையை அந்நாட்டு நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார்.

இந்த பட்ஜெட் உரையில் திருக்குறள் ஒன்றை மேற்கோள்காட்டிப் பேசினார்.

உறுபசியும் ஒவாப் பிணியும் செறுபகையும்
சேரா தியல்வது நாடு

என்ற 734வது திருக்குறளை மேற்கோள்காட்டினார்.

அப்போது அவர் வாசித்து முடிப்பதற்குள் அந்த திருக்குறள் திரையில் (டெலிபிராம்டர்) இருந்து மாயமானதை அடுத்து திகைத்த பிரதமர் பின்னர் கையில் இருந்த பட்ஜெட் அறிக்கையில் அந்த பக்கத்தை தேடினார்.

அதேவேளையில், அருகில் இருந்த துணைப்பிரதமர் அகமது ஸாஹித் ஹமிடி அதை தேடிக் கொடுக்க ‘நாடு’ என்ற அதிகாரத்தில் இடம்பெற்ற அந்த குறளை வாசித்த பிரதமர் அன்வர் இப்ராகிம், பசியும், பிணியும், பகையும் இல்லாத நாடுதான் சிறந்த நாடு என்ற அந்த குறளின் விளக்கத்தையும் கூறினார்.

மேலும், இந்த திருக்குறளை மனப்பாடம் செய்ய தனக்கு 2 மணி நேரம் தேவைப்பட்டதாகவும் குறிப்பிட்டார்.

திரையில் இருந்து மாயமான திருக்குறளை தேடிப் பிடித்து வாசித்த மலேசிய பிரதமர் அன்வர் இப்ராகிமுக்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் மேசையைத் தட்டி தங்களின் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.