கோலாலம்பூர்: சிஏஏ விவகாரத்தில் உண்மையை சொல்வதால் பொருளாதார ரீதியாக இழப்பு ஏற்பட்டாலும் பரவாயில்லை, அதை பற்றி கவலையில்லை  என்று மலேசிய பிரதமர் மகாதீர் முகமது கூறி இருக்கிறார்.

காஷ்மீர் விவகாரம், குடியுரிமை சட்டம் ஆகிய பிரச்னைகளில் மத்திய அரசுக்கு எதிராக மலேசிய பிரதமர் மகாதீர் முகமது கருத்து தெரிவித்தார். இது இந்தியாவை பெரிதும் அதிருப்திக்கு உள்ளாக்கியது.

அதைத் தொடர்ந்து, மலேசியாவில் இருந்து பாமாயில் இறக்குமதி செய்வதில் இந்தியா புதிய கட்டுப்பாடுகள் விதித்தது. உரிமம் இருந்தால்தான் பாமாயில் இறக்குமதி செய்ய முடியும் என்ற நிலையை மத்திய அரசு உருவாக்கியது.

உலக அளவில் பாமாயில் இறக்குமதி அதிகம் செய்வது இந்தியாதான் என்பதால் இந்த விவகாரம் முக்கியமாக பார்க்கப்படுகிறது. உலக நாடுகளில் இந்தோனேசியாவுக்கு அடுத்து, மலேசியா நாடு தான் அதிக அளவு பாமாயில் உற்பத்தி செய்து, ஏற்றுமதி செய்கிறது.

இந்நிலையில் பாமாயில் விவகாரத்தில் இந்தியாவின் கட்டுப்பாடுகள் குறித்து மலேசியா கவலை கொண்டுள்ளது, ஆனாலும், சிஏஏ விவகாரத்தில் உண்மை நிலையை பேசுவோம் என்று அதன் பிரதமர் மகாதீர் முகமது கூறி இருக்கிறார்.

அவர் மேலும் கூறியதாவது: இந்தியாவின் நிலைப்பாடு குறித்து நாங்கள் கவலை கொள்கிறோம். இந்தியாவுக்கு நாங்கள் நிறைய பாமாயிலை ஏற்றுமதி செய்திருக்கிறோம்.

மற்றொரு அடிப்படையில் பார்த்தால் நாங்கள் வெளிப்படை தன்மையாக இருக்க வேண்டும், ஏதேனும் தவறு நடந்தால் நாங்கள் அதைச் சொல்ல வேண்டியிருக்கும்.

அதனால் பொருளாதார ரீதியாக இழப்பு ஏற்பட்டாலும் பரவாயில்லை, அந்த உண்மையை தொடர்ந்து பேசுவோம். பணத்தை பற்றி மட்டுமே சிந்திக்க அனுமதித்தால், எங்களாலும் மற்றவர்களாலும் நிறைய தவறான காரியங்கள் செய்ய முடியும் என்றார்.

இந்தியாவுக்கு 2019ம் ஆண்டில் மட்டும் 4.4 மில்லியன் டன்கள் பாமாயிலை மலேசியா ஏற்றுமதி செய்திருக்கிறது. இப்போது இந்தியா அதற்கு கடும் கட்டுப்பாடுகள் விதித்து இருப்பதால் அந்த இழப்பை ஈடுகட்ட, பாகிஸ்தான், பிலிப்பைன்ஸ், மியான்மர், வியட்நாம், எத்தியோப்பியா, சவுதி அரேபியா, எகிப்து, அல்ஜீரியா, ஜோர்டான் ஆகிய நாடுகளுக்கு பாமாயிலை விற்க முயற்சித்து வருகிறது.

இது தவிர, மலேசியாவின் பாமாயில் உற்பத்தியாளர்களும், இது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்துமாறு அந்நாட்டை வலியுறுத்தி உள்ளனர். இது குறித்து பாமாயில் உற்பத்தியாளர்கள் சங்கத்தினர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்த விஷயத்தில் சொந்த பிரச்னைகளை மையப்படுத்தாமல், அதை ஒதுக்கி வைத்துவிட்டு,  பேச்சுவார்த்தை மூலம் இருநாடுகளும் தீர்வு காண வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.