மலேசியாவில் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக அந்நாட்டின் சில மாநிலங்களில் மோசமான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
கனமழை மற்றும் வெள்ளப்பெருக்கு காரணமாக இதுவரை 3 பேர் உயிரிழந்துள்ளனர், 80000க்கும் அதிகமானோர் வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டுள்ளனர்.
பத்தாண்டுகளில் இல்லாத அளவு மோசமான வெள்ளம் இந்தப் பருவமழைக் காலத்தில் ஏற்படக்கூடும் என்று அந்நாட்டு அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
2014ஆம் ஆண்டில் ஏற்பட்ட வெள்ளத்தைக் காட்டிலும் மோசமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாக மலேசிய துணைப் பிரதமரும் தேசிய பேரிடர் நிர்வாகக் குழுவின் தலைவருமான அகமது ஸாஹிட் ஹமிடி கூறினார்.
அக்டோபர் முதல் மார்ச் வரை பருவமழைக் காலத்தின்போது மலேசியத் தீபகற்பத்தின் கிழக்குக் கடலோரப் பகுதிகளில் வெள்ளம் வழக்கமாக ஏற்படுவதுண்டு. இருப்பினும், இந்த வாரம் பெய்த கடும் மழையால் பெரிய அளவில் மக்களை வெளியேற்ற வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
இன்று காலை நிலவரப்படி 3 பேர் உயிரிழந்ததாகவும் 7 மாநிலங்களில் உள்ள தற்காலிக தங்குமிடங்களில் 80,589 பேர் தங்கவைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், வெள்ளம் காரணமாக, டிசம்பர் 2 வரை கிழக்குக் கடலோரப் பகுதிகளில் ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தேசிய ரயில்வே நிறுவனமான ‘கேடிஎம் பெர்ஹட்’ தனது சமூகவலைதளப் பதிவில் குறிப்பிட்டுள்ளது.