மலேசியாவின் 16வது மன்னராக சுல்தான் அப்துல்லா சுல்தான் அகமது ஷா முடிசூடினார். ஐந்தாம் சுல்தான் பதவி விலகியதை தொடர்ந்து இன்று இவர் மன்னராக பொறுப்பேற்றார்.

malasia

2016ம் ஆண்டு மலேசிய மன்னராக பதவி ஏற்ற ஐந்தாம் சுல்தான் முகமது தனது பதவிக்காலம் முடிவதற்கு முன்பாகவே கடந்த ஜனவரி 6ம் தேதி பதவி விலகினார். ரஷ்ய அழகியை மன்னர் சுல்தான் காதலித்து வந்ததாகவும், அவரை திருமணம் செய்துக் கொண்டதாகவும் செய்திகள் பரவியது. இதை அடுத்து அவர் தனது பதவியில் இருந்து திடீரென விலகினார். மலேசியாவின் வரலாற்றில் ஒரு மன்னர் தானாக தனத பதவியை விட்டு விலகியது இதுவே முதல் முறை. எனினும் சுல்தான் பதவி விலகியது குறித்து அரண்மனை சார்பில் எந்தவித கருத்தும் தெரிவிக்கப்படவில்லை.

சுல்தான் முகமது பதவி விலகி ஒருமாதம் ஆக உள்ள நிலையில் மலேசியாவின் 16வது மன்னராக சுல்தான் அப்துல்லா சுல்தன் அகமது ஷா முடிசூடினார். இந்த நிகழ்வு பிரதமர் மஹாதிர் முகமது மற்றும் கேபினெட் அமைச்சர்கள் முன்னிலையில் நடைபெற்றது. அரண்மையில் நடைபெற்ற பதவி ஏற்பு விழாவில் சுல்தான் அப்துல்லா மன்னராக உறுதிமொழி ஏற்றது தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பட்டது.

இஸ்லாமியர்களால் ஆளப்பட்டு வரும் மலேசியாவில் உள்ள மாநிலங்களில் அரசப்பரம்பரையை சேர்ந்தவர்கள் தான் ஆட்சி செய்து வருகின்றனர். அவர்கள் ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை சுழற்சி முறையில் தேர்வு செய்யப்பட்டு மன்னராக முடிசூட்டப்படுகின்றது. அந்த வகையில் பஹாங் மாநிலத்தின் தலைவராக இருந்து வந்த 59 வயதான சுல்தான் அப்துல்லா தற்போது மன்னராக முடிச்சூட்டப்பட்டுள்ளார்.

விளையாட்டி ஆர்வம் மிகுந்த சுல்தான் அப்துல்லா ஆசிய கால்பந்து கூட்டமைப்பில் உறுப்பினராகவும், உலக கால்பந்து கூட்டமைப்பான ஃபிஃபாபில் உறுப்பினராகவும், மலேசிய கால்பந்து சங்கத்தின் தலைவராகவும் இருந்தது குறிப்பிடத்தக்கது.