தமிழகத்தில் கல்விச்சாலைகளில் மட்டும்தான் ஏற்றத்தாழ்வு, ஜாதி, மதம், இன வேறுபாண்டின்றி மாணாக்கர்கள் படித்து வருகிறார்கள். ஆனால், அதிலும் ஏற்றத்தாழ்வை கொண்டுவரும் வகையில், பாலகுருசாமி கருத்து தெரிவித்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
அண்ணா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக சூரப்பா நியமனம் செய்யப்பட்டதில் இருந்தே, பல்வேறு குளறுபடிகள் நடைபெற்று வருகிறது. மாணவர்களின் அரியர் தேர்வு முடிவுகளில் கோடிக்கணக்கில் பணம் விளையாடியதும் கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் மாநில அரசுக்கு எதிரான அவரது நடவடிக்கை கடும் விமர்சனங்களை ஏற்படுத்தி உள்ளது. சமீபத்தில் அரியர் தேர்வு விவகாரத்திலும், மாநிலஅரசின் முடிவுக்கு எதிராக போர்க்கொடி தூக்கி சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளார். ஏற்கனவே அரியர் தேர்வு மாணவர்களிடம் ஏராளமான பணத்தை வாங்கிக்கொண்டு, முறைகேடு செய்து தேர்ச்சி பெற்ற விவகாரத்தில், எந்தவொரு நடவடிக்கையும் எடுக்காமல் தட்டிக்கழித்து வந்த சூரப்பா, தற்போது கொரோனா அச்சுறுத்லைக் கருத்தில்கொண்டு, அரியர் தேர்வுக்கு பணம் கட்டிய மாணவர்களின் தேர்ச்சி குறித்து தமிழக அரசின் அறிவிப்புக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தார். அவருக்கு ஒத்து ஊதுவதுபோல, முன்னாள் துணைவேந்தர் பாலகுருசாமியும் வழக்கு போட்டுள்ளார்.
இதற்கிடையில், கடந்த செப்டம்பர் மாதம் தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் இறுதிநாளில் (செப்டம்பர் 16ந்தேதி) சென்னை அண்ணா அண்ணா பல்கலைக்கழகத்தை 2 ஆக பிரிப்பதற்கான சட்ட மசோதா தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டது. .
அதன்படி, அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் அண்ணா தொழில்நுட்பம் ஆராய்ச்சி நிறு வனம் என்ற பெயரில் இரண்டாக பிரிக்கப்படுகிறது.
தமிழகத்தில் உள்ள பொறியியல் கல்லூரிகளை அண்ணா பல்கலைக்கழகம் நிர்வகிக்கும் என்றும், அண்ணா தொழில்நுட்ப ஆராய்ச்சி நிறுவனம் சென்னையில் தனியாக செயல்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு அதிருப்தி தெரிவித்துள்ள சூரப்பா உள்பட அவரது ஆதரவாளர்கள், அண்ணா பல்கலைக்கழகத்திற்கும்கிடைக்க வேண்டிய சிறப்பு அந்தஸ்து கிடைக்காது என்று கூறி வருகின்றனர். இது தொடர்பாக, துணை வேந்தர் சூரப்பா, மத்திய அரசுக்கு கடிதம் எழுதினார். சிறப்பு அந்தஸ்து வழங்கப்பட்டால் கல்விக் கட்டணம் உயருவதோடு இட ஒதுக்கீடு பாதிக்கப்படும் என்பதால் சூரப்பா பதவி விலக வேண்டும் என பல்வேறு தரப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். தமிழக அரசிடம் கலந்தாலோசிக்காமல் சூரப்பா தன்னிச்சையாக செயல்பட்ட விவகாரம் சர்ச்சையை கிளப்பியது.
சூரப்பாவின் நடவடிக்கைக்கு விளக்கம் கேட்டுள்ள தமிழகஅரசு, சிறப்பு அந்தஸ்து தேவையில்லை என்று கண்டனம் தெரிவித்ததோடு, தமிழகத்தில் இடஒதுக்கீடு தொடரும் என அறிவித்துள்ளது.
இந்த நிலையில், சூரப்பாவுக்கு ஆதரவாக அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் பாலகுருசாமி, கருத்து தெரிவித்து உள்ளார்.
செய்தியாளரிடம் பேசிய பாலகுருசாமி, “அண்ணா பல்கலைக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கப்பட்டால் பல்கலைக்கழக நிர்வாகத்தில் தமிழக அரசு தலையிட முடியாது. கல்வியில் இலக்குகளை அடைய புதிய கல்விக்கொள்கை தேவை. இலக்கிய அளவில் தமிழ் சரியானதுதான். அறிவியல் அளவிற்கு சரியான வார்த்தை தமிழில் இல்லை. அண்ணா பல்கலைக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கியதை தமிழக அரசு ஏற்க மறுத்தது உள்நோக்கம் கொண்டது. ஏழை மாணவர்களின் கல்வி என்பதற்காக கல்வி தரத்தை உயர்த்தாமல் இருக்க முடியுமா?, தமிழகஅரசு அவர்களுக்கு என தனியாக கல்லூரிகள் உருவாக்கிக்கொள்ள வேண்டும் என்று தெரிவித்து உள்ளார்.
பாலகுருசாமியின் கருத்து சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. குலக்கல்வியை உருவாக்கும் நோக்கில், பாலகுருசாமி செயல்படுகிறரா என்று சமூக வலைதளங்களில் கேள்வி எழுப்பப்பட்டு வருகிறது. மோடி அரசு கொண்டு வந்துள்ள புதியகல்விக்கொள்கை கடுமையான விமர்சனங்களை ஏற்படுத்தி உள்ள நிலையில், பாலகுருசாமி, புதிய கல்விக்கொள்கைக்கு ஆதரவு தெரிவித்திருப்பது மட்டுமின்றி, கல்வியின்போதுதான் மாணவர்களிடையே ஜாதி, மத, இன பாகுபாடின்றி, மாமா, மச்சி என அனைவரும் ஒற்றுமையாக இணைந்து செயலாற்றி வரும் நிலையில், ஏழைகளுக்கு தனியாக கல்லூரிகள் தொடங்க வேண்டும் என கூறியிருப்பது, தமிழக மாணவர்களிடையே இனபாகுபாட்டை ஊக்குவிக்கும் வகையில் உள்ளது.