காமராஜர் காலத்திற்குப் பிறகு, தமிழ்நாட்டில் பெருஞ்சாதி(பெரும்பான்மை சாதி) அரசியல் திரும்பும் நிலை ஏற்பட்டுள்ளது.
இந்தியாவின் இதர மாநிலங்களுடன் ஒப்பிடுகையில், தமிழ்நாட்டின் சமூக அரசியல் சூழல் வித்தியாசமானது மற்றும் ஒருவகையில் நுட்பமானதும்கூட. தமிழ்நாட்டின் அண்டை மாநிலங்கள் உட்பட, பிற மாநிலங்களில் பெரும்பான்மை சாதி அரசியல் மற்றும் ஆதிக்கசாதி அரசியல் கோலோச்சுகையில், இங்கோ, நிலைமை வேறாக இருக்கிறது.
பெரும்பான்மை சமூகங்களின் ஆதிக்க ஒவ்வாமை, தமிழ் சமூகத்திடம் இருக்கிறது. அதனால்தான், ஆந்திராவில் ரெட்டி மற்றும் கம்மாக்களும், கர்நாடகாவில் ஒக்கலிகா மற்றும் லிங்காயத்துகளும், கேரளாவில் ஈழவா மற்றும் சிரியன் கிறிஸ்தவர்களும், மகாராஷ்டிரத்தில் மராத்தாக்களும், ஹரியானா மற்றும் ராஜஸ்தானில் ஜாட்களும், பீகார் மற்றும் உத்திரப்பிரதேசத்தில் யாதவ், தாகுர் மற்றும் குர்மிக்களும் ஆதிக்கம் செலுத்தும் நிலையில், தமிழ்நாட்டில், கடந்த அரைநூற்றாண்டுகளாக தெலுங்கு செங்குந்த முதலியார், இசை வேளாளர், கேரள நாயர் மற்றும் பிராமணர் போன்றோர் ஆதிக்கம் செலுத்தினர் மற்றும் செலுத்துகின்றனர்.
காமராஜர், நாடார் என்ற பெரும்பான்மை சமூகத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும், காங்கிரஸ் இயக்கத்தின் ஆளாகவே அவர் அடையாளப்பட்டார். அவரின் ஜாதிய அரசியல் வலுவானது என்றாலும், காங்கிரஸ் இயக்கத்தின் மூலம் கிடைத்த பொதுப்படைத்தன்மையை அவர் இறுதிவரை இழக்கவில்லை என்பதே உண்மை.
சி.சுப்ரமணியம் என்ற கொங்கு வேளாள கவுண்டரை, அரசியல் போட்டியில் காமராஜர் வீழ்த்தினாலும்கூட, தமிழ்நாட்டின் மேற்குப் பகுதியில் காமராஜர் செல்வாக்காகவே இருந்தார். காமராஜர் காலத்தில், தமிழ்நாட்டின் மேற்கும் தெற்கும் காங்கிரஸ் கோட்டைகளாக இருக்க, டெல்டாவிலும் வடபகுதியிலும் திமுக விரைவாக வளர்கிறது.
சிறுபான்மை சமூகத்தைச்(தெலுங்கு செங்குந்த முதலியார்) சேர்ந்த எழுத்தாற்றலும், பேச்சாற்றலும், மனஉறுதியும் கொண்ட சி.என்.அண்ணாதுரை என்ற ஒரு ஆளுமையின் கீழ், தமிழ்நாட்டின் அரசியல் களம் வேறுவகையில் மாற்றியமைக்கப்படுகிறது.
அதேசமயம், கடந்த 1920களிலிருந்து, அரைநூற்றாண்டு காலத்திற்கும் மேலாக, தமிழ் மண்ணில் களமாடி, தமிழ்நாட்டின் சிந்தனைப் போக்கையே பெரியளவில் மாற்றியமைக்கிறார் கன்னட பலிஜா நாயுடு என்ற சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்த பெரியார் என்ற மாமனிதர்.
பெரியார், அண்ணா மற்றும் கலைஞர் கருணாநிதி போன்ற சிறுபான்மையின ஆளுமைகள், தமிழ் கூறும் நல்லுலகிற்கு செய்த நன்மைகள் கொஞ்ச நஞ்சமல்ல. எனவே, இவர்களையெல்லாம் ஒதுக்கி வைத்துப்பார்த்தல் என்பது இங்கே தேவையற்றது.
ஆனால், தமிழ் உலகைப் பொறுத்தவரை, சிறுபான்மையினரின் ஆதிக்கம் எளிதாக ஏற்கப்படுவதற்கான உளவியல் எங்கிருந்து தொடங்கியிருக்கலாம் என்பதைப் பார்த்தோமானால், நமது நினைவுகள் விஜயநகர ஆட்சியின் காலத்திற்கு செல்கின்றன.
விஜயநகர ஆட்சியின்கீழ், தெலுங்கர்கள் ஏராளமானோர் தமிழகத்தில் குடியேறி ஆதிக்கம் செலுத்தத் தொடங்கினர். அரசியல் மற்றும் சமூக தளங்களில், அவர்களின் ஆதிக்கத்தை ஏற்றுக்கொண்டு பழகிய தமிழர்களுக்கு, சிறுபான்மை இன ஆளுமைகளை ஏற்பதில் இன்றளவும் பிரச்சினை இல்லை என்ற முடிவுக்கே வரமுடிகிறது.
விஜயநகர ஆட்சி, தென்னிந்தியா முழுவதிலும் வியாபித்திருந்தது என்ற நிலையில், கர்நாடகா மற்றும் கேரளாவில் ஏன் சிறுபான்மையினர் அரசியல் ஆதிக்கம் ஏற்படவில்லை? என்ற கேள்வி எழலாம்.
விஜயநகர அரசைத் தோற்றுவித்த ஹரிஹரர் மற்றும் புக்கர் என்ற இரண்டு சகோதரர்களுமே கன்னடர்கள்தான் என்கிறது வரலாறு. மேலும், அந்த அரசின் தலைநகரம், இன்றைய கர்நாடகாவில் உள்ள ஹம்பி. எனவே, விஜயநகர அரசின் கர்நாடகப் பகுதிகளைப் பொறுத்தவரை, அங்கு கன்னடர்களின் ஆதிக்கமே இருந்திருக்க வேண்டும்.
கேரளாவைப் பொறுத்தவரை, அங்கிருந்த சிற்றரசர்கள், விஜய நகரப் பேரரசின் ஆளுகைக்கு உட்பட்டு, கப்பம் கட்டுபவர்களாக இருந்திருக்கிறார்கள் என்றே வரலாறு கூறுகிறது. எனவே, கேரளம் தெலுங்கர்களின் கொக்கிக்குள் சிக்கவில்லை.
ஆனால், தமிழ்நாட்டைப் பொறுத்தவரை, விஜயநகர அரசின் தெலுங்குப் பகுதி ஆதிக்கத்திற்குள் முழுமையாக சிக்கியது எனலாம். தமிழ்நாட்டின் கடைகோடி வரை, தெலுங்கர்கள் குடியேறி, நிலவுடமையாளர்கள் ஆனார்கள். மதுரைக்கு தெற்கே, மக்கள் குடியேற்றம் அபூர்வமாக அமைந்த கரிசல் காட்டுப் பகுதிகளில் தெலுங்கர்கள் அதிகளவில் குடியேறி, அப்பகுதிகளில் மனித சஞ்சாரம் அதிகரிக்க காரணமானார்கள்!
இந்தக் கட்டுரை, நாம் தமிழர் கட்சிக்கான இனவாதப் பிரச்சாரத்திற்கானதல்ல. இதன் நோக்கமே முற்றிலும் வேறானது. இனிவரும் பத்திகளில் அதைப் புரிந்துகொள்ளத்தான் போகிறோம்!
தற்போது, நிகழ்கால தமிழக அரசியலுக்கு வருவோம். கேரள நாயர் எம்.ஜி.ராமச்சந்திரன் என்பவரால் துவக்கப்பட்டு, பின்னர் ஒரு பிராமணரிடம் கைமாறி நின்ற அதிமுகவை, யார் தலைமை தாங்குவது என்ற மோதல், தமிழ்நாட்டின் இரண்டு பெரும்பான்மை சமூகங்களிடையே (முக்குலத்தோர் & கொங்கு வேளாள கவுண்டர்) மூண்டுள்ளது. இந்த இருவரில் யார் வென்றாலும், அதிமுக என்பது ஒரு பெரும்பான்மை சாதியின் தலைமைக்குள்தான் சென்றடையும்.
ஆனால், இங்குதான் தமிழ்நாட்டின் ஒரு சிக்கலான சாதிய உளவியல் முட்டிக்கொண்டு நிற்கிறது. ஒரு சிறுபான்மை சமூகத்தவர் தலைமை வகித்த அதிமுக மற்றும் திமுக போன்ற கட்சிகளில், பல பெரும்பான்மை சமூகத்தவர்கள், அமைச்சர் பதவிகள், மாவட்டச் செயலாளர் பதவிகள் மற்றும் இன்னபிற அரசியல் அதிகாரங்களைப் பெற்று கோலோச்சியிருக்கலாம். அதை மறுப்பதற்கில்லை. ஆனால், அவர்கள் தலைமையாக இருக்கவில்லை என்பதுதான் இங்கே முக்கியம். அதிமுகவைப் பொறுத்தவரை, அதற்கு நிழல் தலைவராக சசிகலா இருந்தார் என்று கூறப்பட்டாலும், அதற்கு புறஉலக அங்கீகாரம் எப்போதும் இருந்ததில்லை என்பதையும் கவனிக்க வேண்டும்.
(மேலும், தமிழகத்தில், சரியான அரசியல் அங்கீகாரம் மற்றும் பிரதிநிதித்துவம் இல்லாத பல சிறிய மற்றும் நடுத்தர மக்கள்தொகை கொண்ட ஜாதிகள் நிறைய உள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்தவகையில் பார்த்தால், சிறுபான்மையினர் தலைமையேற்ற ஆட்சிப் பொறுப்பில், தமிழ்நாட்டின் சில பெரும்பான்மை சாதிகள்தான் பெரிய நன்மைகளை அனுபவித்துள்ளன என்றும் புரிந்து கொள்ளலாம்)
பாமக என்ற ஒரு கட்சியை எடுத்துக்கொண்டால், அது பெருஞ்சாதி அரசியலை செய்வதற்கு நீண்டகாலமாக முயன்று வருகிறது. ஆனால், அந்த முயற்சிக்கு வன்னியரல்லாத இதர சாதி இந்துக்கள் மற்றும் தலித்துகள் ஒருபோதும் ஆதரவு தருவதற்கில்லை. வன்னியர் எதிர்ப்பு அரசியல் என்பது, வடதமிழகத்தில் எப்போதுமே உண்டு. காமராஜரை முன்வைத்து தென்தமிழகப் பகுதிகளில் நாடார் எதிர்ப்பு அரசியல் இருந்ததையும் நாம் மறுப்பதற்கில்லை!
அதிமுகவிற்கு, வரும் நாட்களில் கொங்கு வேளாளர் தலைமை ஏற்படுமானால், இதர சாதிகளைச் சேர்ந்தவர்களுக்கு அதை ஏற்கும் மனப்பக்குவம் வருமா? என்பது கேள்விக்குறியே! இவ்வளவு ஏன், கொங்குப் பகுதிகளில் உள்ள இதர ஜாதிகளே, அவர்களுக்கு எதிராக வாக்களிப்பார்கள். இதே நிலைமைதான் முக்குலத்து சமூகத்தவர் அதிமுக தலைமையேற்றாலும்! முக்குலத்தோர் பெல்ட்டில், இதர ஜாதிகளின் வாக்குகள் அப்படியே வேறுகட்சிகளுக்கு செல்லும்!
இப்போது, தமிழ்நாட்டில், திமுக – அதிமுக இரண்டும்தான் பெரிய கட்சிகள். 30%க்கும் மேலான வாக்கு வங்கியை வைத்திருப்பவை. இவற்றில், திமுகவின் தலைவரும், முதலமைச்சர் வேட்பாளருமான ஸ்டாலின், மைக்ரோ மைனாரிட்டி என்று சொல்லப்படும் இசை வேளாளர் என்ற சமூகத்தைச் சேர்ந்தவராக இருக்கிறார்.
ஆனால், எதிர்க்கட்சியான அதிமுகவிலோ, இரண்டு பெரிய சமூகங்களிடையே மோதல் நடந்து வருகிறது. இதில், யார் வென்றாலும் ஒருவகையில் ஸ்டாலினுக்கு லாபம்தான்!
ஏனெனில், இன்னொரு பெரிய ஜாதியின் ஆதிக்கத்தை விரும்பாத, தமிழகத்தில் சாதிரீதியாகப் பிரிந்துள்ள வாக்காளர்கள், மைக்ரோ மைனாரிட்டி சமூகத்தைச் சேர்ந்த ஸ்டாலினுக்கு இயல்பாகவே ஆதரவளிக்கும் வாய்ப்புகள் அதிகம் உள்ளன!
இங்கே, சுத்த தமிழர்கள் vs தெலுங்கர் & கன்னடர் என்ற ஒரு முரண்பாட்டை நாம் வைத்துக்கொள்ளத் தேவையில்லை. இந்தக் கட்டுரை அந்த நோக்கில் எழுதப்படவில்லை. ஒருவேளை, சிலர் பிடிவாதமாக அப்படியே வைத்துக்கொண்டாலும், சுத்த தமிழர்கள் ஆளும் இந்த 4 ஆண்டுகளில்தான், கடந்த 50 ஆண்டுகளாக தமிழகம் எதிர்கொள்ளாத துயரங்களையெல்லாம் சந்தித்து வருகிறது என்பதையும் நினைவில் வைத்துக்கொண்டால் சிறப்பு..!
– மதுரை மாயாண்டி