சிகாகோ :
வம்பர் 3-ம் தேதி நடக்க இருக்கும் அமெரிக்க அதிபர் தேர்தலில் கொரோனா வைரஸ் காரணமாக பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது.
முதல் முறையாக நேரடி வாக்குப் பதிவு தவிர தபால் மூலமும் வாக்கு பதிவு செய்ய அமெரிக்க வாக்காளர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அப்படி தபால் மூலம் வாக்களிப்பவர்களின் வாக்குகளை பெற்றுக்கொள்ளும் தேர்தல் அதிகாரியிடமிருந்து வாக்காளரின் மின்னஞ்சலுக்கு தகவலளிக்கப்படும்.
சில மாகாணங்களில் தேர்தல் நாளான நவம்பர் 3 வரை வந்து சேரும் தபால் ஓட்டுகள் ஏற்றுக்கொள்ளப்படும் என்றும், வேறு சில மாகாணங்களில் நவம்பர் 3 தபால் முத்திரையுடன் வரும் வாக்குகள் வந்து சேர ஏதுவாக ஒரு சில வார காலம் வாக்கு எண்ணிக்கை நீட்டிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், சிகாகோவை சேர்ந்த 102 வயது மூதாட்டி பீட்ரைஸ் லும்ப்கின் தனது வாக்கினை தபால் மூலம் அனுப்பிவைக்க வந்திருந்தார். கொரோனா வைரஸ் பெரும்பாலும் வயதானவர்களையே தாக்கும் என்பதால், இவர் முழு உடல் கவசம் அணிந்து வந்து தபால் அனுப்பியது அனைவரையும் ஆச்சர்யப்பட வைத்தது.
இதுகுறித்து அவரிடம் கேட்ட போது, “ஜனநாயகத்தை காப்பாற்ற இது என் வாழ்நாளில் முக்கியமான தேர்தல்” என்று கூறிய லும்ப்கின். தான் 1940 முதல் அனைத்து தேர்தலிலும் தவறாமல் வாக்களித்து வருவதாகவும் முதன் முதலாக ரூஸ்வெல்டுக்கு வாக்களித்ததாகவும் கூறிய அவர், தான் பிறந்த காலத்தில் பெண்களுக்கு வாக்குரிமை இல்லை என்றும் பெண்ணுரிமையை போற்றுவதற்காகவே தான் இப்போது வாக்களிக்க வந்ததாக நினைவு கூர்ந்தார்.
வாக்களிப்பதில் உள்ள புதிய முறை பற்றி அவரிடம் கேட்டபோது, “எனக்கு மின்னஞ்சல் மூலம் தகவல் வந்துவிடும் என்பதால் இதில் எந்த சிரமமும் இல்லை என்று கூறினார்”. மேலும், தபால் வாக்குக்கு எதிர்ப்பு தெரிவித்து அதிபர் டிரம்ப் பேசிவருவது குறித்து கேட்டதற்கு. “வாய்ப்பு கிடைத்தால் டிரம்ப்க்கு அறிவுரை கூற என்னிடம் நிறைய விஷயங்கள் இருக்கிறது” என்று கூறி அசத்தினார்.
வாக்குப் பதிவில் வெவ்வேறு மாகாணங்களில் வெவ்வேறு நடைமுறை கடைபிடிக்கப்படும் நிலையில், தபால் வாக்குகளும் தேர்தல் நாளுக்கு முன்பாகவே நேரடியாக வந்து வாக்கு செலுத்தும் நடவடிக்கையும் பல மாகாணங்களில் ஏற்கனவே தொடங்கி விட்டன என்பது குறிப்பிடத்தக்கது.