கொழும்பு:
மகிந்த ராஜபக்சே இந்தியாவிற்குள் தஞ்சம் அடைந்துள்ளதாக வெளியான தகவலுக்கு இலங்கையில் உள்ள இந்திய தூதரகம் மறுப்பு தெரிவித்துள்ளது.
கடும் பொருளாதார நெருக்கடியால் அவதி அடைந்த இலங்கை மக்கள் மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அரசுக்கு எதிராக தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர்.
ராஜபக்சே குடும்பத்தினர் பதவியில் இருந்து விலக வேண்டும் என்றும் அவர்கள் வலியறுத்தினர். இந்நிலையில் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களுக்கும், ராஜபக்சே ஆதரவாளர்களுக்கு இடையே நேற்று ஏற்பட்ட மோதல் வன்முறையாக வெடித்தது.
இதையடுத்து மகிந்த ராஜபக்சே உள்பட ஆளும் கட்சியை சேர்ந்த சுமார் 35 அரசியல் தலைவர்களின் வீடுகள் நேற்று தீ வைத்து எரிக்கப்பட்டன. இந்த வன்முறையில் 8 பேர் உயிரிழந்துள்ளனர். நூற்றுக்கும் மேற்பட்ட வாகனங்கள் சேதப்படுத்தப்பட்டுள்ளன.
பேருந்துகளுக்கு தீ வைக்கும் சம்பவங்களும் நடைபெற்றன. போலீசார் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டதால் பதற்றம் நீடிக்கிறது.
இந்நிலையில் பொது சொத்துக்கள் மற்றும் தனி நபர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்துவோர் மீது துப்பாக்கிச் சூடு நடத்த இலங்கை முப்படைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக இலங்கை ராணுவ ஊடக பிரிவு தகவல்கள் தெரிவித்துள்ளன.
இந்நிலையில், மகிந்த ராஜபக்சே இந்தியாவிற்குள் தஞ்சம் அடைந்துள்ளதாக இணையதளத்தில் தகவல் பரவி வருகிறது.
இந்த தகவலை இலங்கையில் உள்ள இந்திய தூதரகம் மறுத்துள்ளது.
இதுகுறித்து இலங்கை விமான போக்குவரத்து துறை இயக்குனர் வெளியிட்டுள்ள தனிலை விளக்கத்தில், இலங்கையில் இருந்து யாரையும் நாடு கடத்தவில்லை என்று குறிப்பிடப்பட்டுள்ளது.