திருவனந்தபுரம்: காந்தி படுகொலையை மறக்கமாட்டோம் என்று பாஜகவுக்கு எதிராக பட்ஜெட் புத்தகத்தை கேரள அரசு வடிவமைத்த விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
மத்தியில் ஆளும் பாஜக அரசின் தவறான சட்டங்கள், நடவடிக்கைகளை கேரள அரசு தொடர்ந்து விமர்சித்து வருகிறது. குறிப்பாக குடியுரிமை சட்டத்திற்கு எதிராக தீர்மானம் முதல் மிகப்பெரிய போராட்டங்களை இடதுசாரி அரசு முன்னின்று நடத்தி வருகிறது.
அண்மையில் காந்தியின் நினைவு நாளன்று அவர் பற்றி பல தவறான தகவல்களை இந்துத்வா தரப்பினர் பரப்பியதாக கூறப்பட்டது. அதற்கு பல தரப்புகளில் இருந்து கடும் கண்டனங்கள் எழுந்தன.
இதுபோல தவறான செய்திகளை பரப்பி, வரலாற்றை திரித்துக் கூறும் பாஜகவுக்கு பதிலடி கொடுக்க நினைத்த கேரள அரசு, சட்டமன்றத்தில் அதை வெளிக்காட்டியது.
இன்று நடைபெற்ற பட்ஜெட் கூட்டத்தின் போது வழங்கிய பட்ஜெட் புத்தகத்தின் முகப்பு பக்கத்தில் காந்தி படுகொலையை சித்தரிக்கும் வகையில் உள்ள வரைபடத்தை இடம்பெற செய்தது. பட்ஜெட் புத்தகம் தொடர்பான புகைப்படம் தற்போது சமூகவலைதளங்களில் வைராகப் பரவி வருகிறது.
பலரும் கேரள அரசின் இந்த நடவடிக்கைக்கு வரவேற்பு தெரிவித்து வருகின்றனர். இது குறித்து நிதி அமைச்சர் தாமஸ் ஐசக் கூறியதாவது: டாம் வட்டக்குழி வரைந்த மகாத்மா காந்தியின் படுகொலை ஓவியத்தை பட்ஜெட் புத்தகத்தில் இடம்பெறச் செய்தது எங்கள் அரசியல் நிலைப்பாடு.
நாங்கள் காந்தியின் படுகொலையை மறக்க மாட்டோம். இன்று வரலாறு மாற்றி எழுதப்பட்டு வரும் சூழலில் உண்மைச் சம்பவங்களை நினைவு கூருவது ஒரு வரலாற்றுக் கடமை.
பல முக்கிய சம்பவங்களை மறக்கடிக்கும் நடவடிக்கைகளை இந்த அரசாங்கம் மேற்கொண்டு வருகிறது. என்ஆர்சி மூலம் மக்களை மத ரீதியாக பிளவுபடுத்த முயற்சித்தால் கேரள ஒன்றுப்பட்டு அதை எதிர்த்து நிற்கும் என்றார்.
முன்னதாக சட்டசபையில் உரையாற்றிய அவர், கேரளா போன்ற மாநிலங்கள் வருவாயில் சரிவை கண்டு வருகிறது, மூச்சு திணறுகிறது. வரவு செலவுத் திட்டத்தில் எதிர்பார்க்கப்படும் மாநில பங்கு ரூ.24,915 கோடியாக இருந்தது. மத்திய அரசை அணுகிய போது, ரூ .5,325 கோடி இதிலிருந்து குறைக்கப்பட்டது என்று கூறினார்.