டில்லி:

காத்மா காந்தி கொலை வழக்கை மீண்டும் விசாரிக்க எந்தவொரு முகாந்திரமும் இல்லை என்று உச்சநீதி மன்றம் அறிவித்து உள்ளது.

தேசத்தந்தை என்று அழைக்கப்படும்  மகாத்மா காந்தி கொலையில் ஏற்கனவே நடைபெற்ற  வழக்கு விசாரணை யில் பல்வேறு குளறுபடிகள் உள்ளதாக மும்பையைச் சேர்ந்த பங்கஜ் என்பவர் உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கை இன்று விசாரணைக்கு எடுத்துக்கொண்ட உச்சநீதி மன்றம், மகாத்மா காந்தி கொலை வழக்கை மீண்டும் விசாரிக்க எந்தவித முகாந்திரம் இல்லை எனக்கூறி  வழக்கை தள்ளுபடி செய்தனர்.

மும்பையைச் சேர்ந்த வரலாற்று ஆய்வாளர் பங்கஜ் பட்னிஸ், அபிநவ பாரத் என்று தொண்டு அமைப்பை நடத்தி வருகிறார். அவரது அமைப்பு  சார்பில் மகாத்மா காந்தி கொலை வழக்கை மீண்டும் விசாரிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கில்,  நீதிமன்றத்தின் உதவியாளராக  மூத்த வழக்கறிஞர் அமரேந்திர சரண் என்பவரை  உச்சநீதி மன்றம் நியமனம் செய்தது.

அவர், வழக்கு குறித்து  மீண்டும் விசாரிக்க வேண்டிய தேவையில்லை என்று கூறியிருந்தார்.

அதைத்தொடர்ந்து கடந்த ஜனவரி மாதம்   நடைபெற்ற விசாரணையின்போது, பங்கஜ் தரப்பில், டில்லி பிர்லா இல்லத்தில் கடந்த 1948-ஆம் ஆண்டு ஜனவரி 30-ம் தேதி மகாத்மா காந்தி சுட்டுக் கொல்லப்பட்டார். காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட நாதுராம் கோட்சே, நாராயண் ஆப்தே ஆகியோர் 1949-ம் ஆண்டு நவம்பர் 15-ம் தேதி தூக்கிலிடப்பட்டனர்.

கிழக்கு பஞ்சாப் உயர் நீதிமன்றம் 1949-ஆ ம் ஆண்டு ஜூன் 21-இல் கோட்சே, ஆப்தே இருவருக்கும் தூக்கு தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.  இந்தியா சுதந்திரமடைந்துவிட்ட நிலையில், இந்திய உச்ச நீதிமன்றம் செயல்பாட்டு வர குறுகிய கால இடைவேளையே இருந்த நிலையில், காந்தி கொலை வழக்கை உச்ச நீதிமன்றம் மூலம் முழுமையாக விசாரிக்காமல் இருவர் தூக்கிலிடப்பட்டனர் என்று கூறியிருந்தார்.

மேலுரம், கோட்சே கூட தனது குற்றத்தை ஒப்புக் கொண்டுவிட்ட நிலையில்,  அவரைத் தூக்கிலிட்டது முறை யானது இல்லை என்றாலும், சட்ட விரோதமல்ல. ஆனால், காந்தி கொலை வழக்கில் இரண்டாவது குற்றவாளி யாக சேர்க்கப்பட்ட ஆப்தே நான் எந்தக் குற்றமும் செய்யாத அப்பாவி என்று நீதிமன்றத்தில் கூறினார்.

அவரது கருத்து ஏற்றுக்கொள்ளாமல், அவரை தூக்கிலிட்டது சட்ட விரோதம் என்றும், எனவே, மகாத்மா காந்தி கொலை வழக்கை உச்ச நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்க வேண்டும் என்று கூறப்பட்டது.

அதைத்தொடர்ந்து வழக்கு விசாரணை ஒத்தி வைக்கப்பட்ட நிலையில், இன்று மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

இந்நிலையில், மகாத்மா காந்தி கொலை வழக்கை மீண்டும் விசாரிக்க எந்தவொரு முகாந்திரமும் இல்லை என்று உச்சநீதி மன்றம் அறிவித்து வழக்கை தள்ளுபடி செய்வதாக அறிவித்தது.