மும்பை

ங்கன்வாடி ஊழியர்களுக்கு மொபல் வாங்கியதில் பாஜக பெண் அமைச்சர் பங்கஜா முண்டே ரூ. 106 கோடி ஊழல் செய்துள்ளதாக எதிர்க்கட்சி தலைவர் குற்றம் சாட்டி உள்ளார்.

மகாராஷ்டிர மாநில பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை பெண் அமைச்சர் பங்கஜா முண்டே.  இவர் கடந்த வருடம் அங்கன்வாடி ஊழியர்களுக்கு அரசு சார்பில் மொபைல், சிம் மற்றும் டேட்டா பேக்கேஜ் அளித்தார்.   இதற்காக அரசு சார்பில் அவர் 1.02 லட்சம் மொபைல்கள் வாங்கி உள்ளார்.   இதைத் தவிர உபரியாக 5100 மொபைல்கள் வாங்கி இருப்பில் வைத்துள்ளார்

இதற்காக பானசோனிக் எலுகா 17 மாடல் மொபைல்கள் வாங்கப்பட்டுள்ளன.    இந்த மொபைல்களின் சந்தை விலை ரூ. 6499 ஆகும்.   ஆனால் இந்த மாடல் மொபைல்களை பங்கஜா ரூ. 8777 க்கு வாங்கி உள்ளார்.   அதே நேரத்தில் இந்த மொபைல் ரூ. 6000 லிருந்து ரூ.6400 க்குள் ஆன்லைனில் கிடைக்கின்றன.

இது குறித்து அம்மாநில எதிர்கட்சியான தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் தனஞ்சய் முண்டே, “இந்த மொபைல்கள் இவ்வளவு அதிக விலை கொடுத்து வாங்கியதற்கான காரணம் தெரிவிக்கப்படவில்லை.   இவ்வளவு அதிக அளவில் வாங்கும் போது பேரம் பேச வேண்டும்.  அப்படி எதுவும் நடைபெறவில்லை.  அது மட்டுமின்றி இந்த மொபைல்களின் விலைப்புள்ளி அளித்த பல வர்த்தக நிறுவனங்கள் தங்கள் முகவரியை தெரிவிக்காமல் அளித்துள்ளன.   இதில் ரூ. 106 கோடிக்கு மேல் ஊழல் நடந்துள்ளது.

இந்த மாடல் 2018 ஆம் வருடம் ஏப்ரல் மாதம் வெளியிடப்பட்டுள்ளது.  ஆனால் அதற்கு கிராக்கி இல்லாததால் உற்பத்தி நிறுத்தப்பட்டது.   அதன் பிறகு விற்காமல் தேங்கிப் போன 5100 மொபைல்களை அமைச்சர் பங்கஜா உபரியாக வாங்கி இருப்பில் வைத்துள்ளார்.   இந்த ஊழல் குறித்து உடனடியாக முதல்வர் தேவேந்திர ஃபட்நாவிஸ் விசாரணை நடத்த வேண்டும்.   அத்துடன் மேலும் மொபைல்கள் வாங்க தடை செய்யவேண்டும்” என தெரிவித்துள்ளார்.

அமைச்சர் பங்கஜா முண்டேவுக்கு அவர் மீது குற்றம் சாட்டி உள்ள எதிர்க்கட்சி தலைவர் தனஞ்சய் முண்டே ஒன்று விட்ட சகோதரர் என்பது குறிப்பிடத்தக்கது.