மும்பை

காராஷ்டிரா அரசு தடை செய்யப்பட்ட குட்காவை விற்பது ஜாமினில் வர முடியாத குற்றமாக மாற்றப்பட உள்ளதாக சட்டப்பேரவையில் அறிவித்துள்ளது

இன்று மகாராஷ்டிரா சட்டப் பேரவையில் குட்கா பற்றிய விவாதம் நடந்தது.  அப்போது பேசிய சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் தனஞ்செய் முண்டே, “மாநிலத்தில் குட்காவுக்கு தடை விதிக்கப்பட்டுள்ள போதிலும் பெருமளவில் விற்பனை ஆகி வருகிறது.   இவை அருகில் உள்ள மாநிலங்களில் இருந்து கடத்தி வரப்பட்டு விற்பனை செய்யப்படுகின்றன.    இதற்கு முக்கிய காரணம் உணவு மற்றும் மருந்து நிர்வாகத் துறை அதிகாரிகளின் ஊழலே ஆகும்.    இவர்களை புலனாய்வுத்துறை காவல்துறை விசாரிக்க வேண்டும்”  எனக் குறிப்பிட்டார்.

அதற்கு பதில் அளித்த உணவு மற்றும் மருந்து நிர்வாகத்துறையின் இணை அமைச்சர் மதன் யராவர், “குட்கா தடை செய்யப்படாத அண்டை மாநிலங்களில் குட்கா உற்பத்தி ஆகிறது.   எங்கள் துறை மாநிலத்துக்கு கடத்தி வரப்படும் குட்காவை பறிமுதல் செய்து அழித்து வருகிறது.   கடந்த 2012-13 வருடத்தில் இருந்து இதுவரை  சுமார் ரூ. 114.2 கோடி மதிப்புள்ள குட்கா கைப்பற்றப்பட்டு அழிக்கப்பட்டுள்ளது.” எனக் கூறினார்.

மேலும் உணவு மற்றும் மருந்து நிர்வாகத் துறை அமைச்சர் கிரீஷ் பாபட், “தற்போது குட்கா விற்பது ஜாமினில் வரக்கூடிய குற்றமாக உள்ளது.  அது விரைவில் ஜாமீனில் வர முடியாத குற்றமாக மாற்றப்படும்.   இது குறித்து காவல் துறை மற்றும் சட்டத்துறை அதிகாரிகளிடம் பேச்சு வார்த்தை நடைபெற்றுள்ளது.  மத்திய அரசும் இதற்கு ஒப்புதல் வழங்கி உள்ளது.   இந்த சட்டம் அமுலாக்கப்பட்ட பின் குட்கா விற்றால் மூன்றாண்டு கடுங்காவல் சிறை தண்டனை வழங்கப்படும்” எனக் கூறினார்.