மும்பை
நடிகர் ஷாருக்கான் மகனை அதிகாரிகள் கைது செய்யவில்லை எனவும் பாஜகவினர் கைது செய்ததாகவும் மகாராஷ்டிர அமைச்சர் நவாப் மல்லிக் தெரிவித்துள்ளார்.
கடந்த சனிக்கிழமை அன்று பிரபல நடிகர் ஷாருக்கான் மகன் ஆர்யன் கான் உள்ளிட்ட 17 பேர் ஒரு சொகுசுக் கப்பலில் போதைப் பொருள் உட்கொண்டதாகப் போதைப் பொருள் தடுப்புத் துறையால் கைது செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகின. அப்போது ஏராளமான போதைப் பொருட்கள் பிடிபட்டதாகவும் கூறப்பட்டது. இதையொட்டி ஆர்யன் கான் உள்ளிட்டோரிடம் விசாரணை நடந்து வருகிறது.
இந்நிலையில் மகாராஷ்டிர அமைச்சர் நவாப் மல்லிக் பல அதிர்ச்சி தகவல்களைக் கூறி உள்ளார். அவர் செய்தியாளர்களிடம், “உண்மையில் கப்பலில் நடந்ததாக கூறப்படும் சோதனை மிகவும் போலியானதாகும். அப்படி ஒரு சோதனை நடக்கவும் இல்லை. அத்துடன் அங்கு போதைப் பொருள் பிடிபடவும் இல்லை. மேலும் ஆர்யன் கானை கைது செய்து அழைத்துச் செல்வது ஒரு பாஜக தொண்டர்கள் ஆவார்கள்.
அந்த நபர் தனது சமூக வலைத் தளக் கணக்கில் தாமொரு தனியார் துப்பறிவாளர் என்க் குறிப்பிட்டுள்ளார். அவர்கள் அதிகாரிகள் இல்லை என்றால் எவ்வாறு ஆர்யன்கான் உள்ளிட்டோரைக் கைது செய்தனர்? போதை பொருள் விற்பனையாளர் எனச் சொல்லப்படுபவரை அழைத்துச் செல்பவர் குஜராத் துறைமுகத்தில் பிடிபட்ட 3000 கிலோ போதைப் பொருள் வழக்கில் தொடர்புடையவர் எனச் சந்தேகம் உள்ளது.
இதன் மூலம் பாஜகவினர் போதைப் பொருள் தடுப்புத் துறையின் பெயரால் மகாராஷ்டிர அரசு மற்றும் பாஜகவுக்கு எதிரான பாலிவுட் பிரமுகர்கள் மீது பழி போட இவ்வாறு தகவல்கள் வெளியிட்டுள்ளனர் எனத் தெரிய வந்துள்ளது. இது தொடர்பான வீடியோ காட்சிகளைக் கண்டால் இவை அனைத்தும் உண்மை எனத் தெரிய வரும். இது விவசாயிகள் போராட்டத்தை திசை திருப்ப பாஜக நடத்தும் நாடகம்” எனக் கூறி உள்ளார்.