டெல்லி: பெரிதும் எதிர்பார்த்த காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து என்ற அஸ்திரம் பாஜகவுக்கு 2 மாநில சட்டசபை தேர்தல்களில் கை கொடுக்கவில்லை என்று அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

பாஜக 2வது முறை மத்தியில் அரியணை ஏறிய பின்பு நடைபெற்ற முக்கிய தேர்தல் என்றால் நாடு முழுவதும் நடைபெற்ற இடைத்தேர்தல்களும், மகாராஷ்டிரா, அரியானா சட்டசபை தேர்தல் தான்.

மகாராஷ்டிராவில் பாஜக, சிவசேனா கூட்டணி மீண்டும் ஆட்சி. அரியானாவில் இதோ, அதோ என்று போராடி சுயேட்சைகள் ஆதரவும் பாஜக ஆட்சி அமைக்கிறது. இந்த தேர்தல் முடிவுகளால் பாஜகவுக்கு மகிழ்ச்சி இல்லை என்றும், தலைமை இன்றி தவிக்கும் காங்கிரசுக்கு ஏறுமுகமே என்று அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

அவர்கள் கூறுவதற்கு காரணம் இல்லாமல் இல்லை. ஏன் என்றால் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு என்பது முற்றிலும் தவிடுபொடியானது. மகாராஷ்டிராவிலும், அரியானாவிலும் காங்கிரசானது எதிர்பாராத அளவுக்கு முன்னேற்றம் கண்டிருக்கிறது.

பாஜக முகாமிலோ அந்த மகிழ்ச்சி இல்லை என்று அரசியல் நிபுணர்கள் கூறியிருக்கின்றனர். அவர்கள் கூறும் காரணங்கள் இதுதான்: ஒவ்வொரு தேர்தலிலும் பாரத் மாதா கீ ஜே என்ற முழக்கங்கள் அடிப்படையில் உணர்ச்சிவசப்பட்டு வாக்காளர்கள் ஆதரவு தந்தார்கள்.

இந்த முறையும் அதுவே நிகழும் என்று அட்சுரசுத்தமாக பாஜகவினர் நம்பினர். அதுவே நடக்கும் என்று எதிர்பார்த்தனர். உணர்ச்சிவயப்பட்ட பேச்சுகள், கருத்துகள், நடவடிக்கைகளுக்கு வாக்காளர்கள் மயங்கவில்லை.

இது குறித்து அரசியல் நிபுணர் இம்தியாஸ் அகமது கூறியிருப்பதாவது: குறிப்பாக 370வது சட்டப்பிரிவு தமது வெற்றிக்கு கை கொடுக்கும் என்று பாஜக திடமாக நம்பியது. ஆனால் மக்கள் அதை பற்றி சிந்திக்கவில்லை. வேலை வாய்ப்பின்மை போன்ற பிரச்சனைகளை மனதில் வைத்து தான் வாக்களித்து இருக்கின்றனர் என்றார்.

சமூக அரசியல் நிபுணரான யோகேந்திர யாதவ் கூறியிருப்பதாவது: மக்களை சிந்திக்கவிடாமல், உணர்ச்சிவயப்பட்ட நிலையில் வைத்திருந்தால் போதும். தேர்தலும், அதன் முடிவுகளும் தமக்கு சாதமாக அமைந்துவிடும் பாஜக எதிர்பார்த்தது. ஆனால் வாக்காளர்கள் தெளிவாக இருந்துவிட்டனர்.

அரியானா மாநிலம் ராணுவ வீரர்களால் நிரம்பிய மாநிலம். ஒரு மாதம் முழுவதும பயணித்து, 100க்கும் மேற்பட்ட அரசியல் பிரச்சார கூட்டங்களை ஆய்வு செய்தேன். யாரும் 370வது சட்டப்பிரிவு நீக்கம் பற்றி கவலைப்பட வில்லை.

அரசியல் தளத்தில், கட்சிகள் இது போன்ற நிகழ்வுகளை சுய சார்புடன், ஜனநாயக முறையில் சரி செய்ய வேண்டும் என்று நாங்கள் பேசுவதுண்டு. இரு மாநில தேர்தல் முடிவுகளும் பாஜகவுக்கு சில விஷயங்களை உணர்த்தி இருக்கின்றன.

அரியானா, வேலையின்மை திண்டாட்டம் அதிகம் உள்ள மாநிலங்களில் முதலிடத்தில் உள்ளது. ஒவ்வொரு முறையும், வேலைவாய்ப்புகளை பெருக்குவதாக பாஜக வாக்குறுதி அளித்து வந்தது. ஆனால் இம்முறை எதிர்பார்த்த முடிவுகள் அந்த கட்சிக்கு கிடைக்கவில்லை.

தேரா சச்சா விவகாரம், பாபா ராம்பால் பிரச்னை, ஜாட் போராட்டம் என பல விஷயங்கள் பாஜகவின் வெற்றியை சேதப்படுத்திவிட்டன. மக்கள் கோபம், வாக்குகளாக மாறி, பாஜக அரசை தண்டித்துவிட்டது என்றார்.

மற்றொரு சமூக ஆர்வலரான சகுந்தலா நந்தால் கூறிய கருத்துகள் வேறு விதமானவை. அவர் கூறியிருப்பதாவது: மக்களை உணர்ச்சிவயப்பட்ட நிலையிலேயே வைத்திருக்க வேண்டும் என்ற பாஜகவின் எண்ணம், அந்த கட்சிக்கு எதிராகவே திரும்பிவிட்டது. அரியானாவில் தீர்க்கப்படாமல் இருக்கும் பல நுண்ணிய பிரச்னைகள் பாஜக தேர்தல் முடிவுகளை பாதித்துவிட்டது என்றார்.