மும்பை: மகாராஷ்டிராவில் நாளை இரவு 8 மணி முதல் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்படும் என்று அம்மாநில முதலமைச்சர் உத்தவ் தாக்கரே அறிவித்து உள்ளார்.
மகாராஷ்டிரா, தமிழகம், குஜராத், டெல்லி உள்ளிட்ட மாநிலங்களில் கொரோனா தொற்றுகள் தொடர்ந்து உயர்ந்து கொண்டே வருகிறது. குறிப்பாக மகாராஷ்டிராவில் 34 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத அளவாக அங்கு கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ளது. ஆகையால் இரவு நேரத்தில் பொதுமுடக்கம், விடுமுறை தினங்களில் பொதுமுடக்கம் என்று அம்மாநில அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது. அப்படி இருந்தும் நாள்தோறும் 60 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கொரோனா தொற்றுகள் பதிவாகி வருகிறது.
இந்நிலையில், இன்று இரவு 8 மணிக்கு முதலமைச்சர் உத்தவ் தாக்கரே தொலைக்காட்சியில் உரையாற்றினார். அப்போது, நாளை இரவு 8 மணி முதல் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது என்று அறிவித்தார். அவர் மேலும் தமது உரையில் கூறி இருப்பதாவது:
கடுமையான கட்டுப்பாடுகளை விதிக்கப்படுகின்றன. நாளை இரவு 8 மணி முதல் இது நடைமுறைக்கு வரும். 144வது பிரிவு நாளை முதல் முழு மாநிலத்திலும் விதிக்கப்பட உள்ளது. சரியான காரணம் இன்றி யாரும் வீட்டை விட்டு வெளியே செல்ல அனுமதி இல்லை.
திரையரங்குகள், கேளிக்கைப் பூங்காக்கள், உடற்பயிற்சி கூடங்கள், விளையாட்டு அரங்குகள் உள்ளிட்டவை மூடப்படும். திரைப்படம் மற்றும் நாடகங்களுக்கான படப்பிடிப்பு ரத்து செய்யப்படுகிறது. வணிக வளாகங்கள் செயல்படாது. அத்தியாவசிய சேவைகள் தவிர்த்து மற்ற செயல்பாடுகளுக்கு ஏப்ரல் 14 இரவு 8 மணி முதல் மே 1 காலை 7 மணி வரை தடை விதிக்கப்படுகிறது
மருத்துவர்கள், சுகாதாரம், எமர்ஜென்சி நிலைமை, வங்கி மற்றும் விவசாயத் துறைகளில் பணிபுரிவோர் வெளியே செல்ல அனுமதிக்கப்படுவார்கள். உணவகங்கள் மற்றும் ஹோட்டல்கள் மூடப்படும், ஆனால் வீடுகளுக்கு டெலிவரி செய்ய அனுமதி உண்டு. சாலையோர கடைகளும் வீடுகளுக்கு உணவு டெலிவரி செய்ய அனுமதி உண்டு.
ஒரு மாதத்திற்கு 3 கிலோ கோதுமை மற்றும் 2 கிலோ அரிசியை ஏழை மற்றும் எளிய மக்களுக்கு மாநில அரசு இலவசமாக வழங்கும். நாள் ஒன்றுக்கு 40,000-50,000 ரெம்டிசிவிர் மருந்துகள் பயன்படுத்தப்படுகிறது. கொரோனா வழக்குகள் தொடர்ந்து அதிகரித்தால், இதன் தேவை நாள் ஒன்றுக்கு 1 லட்சம் வரை செல்லும் என்று கூறினார்.