மும்பை
பாரிசில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டியில் வெண்கலப்பதக்கம் வென்ற ஸ்வப்னில் குசாலேவுகு மகாராஷ்டிர அரசு ரூ. 1 கோடி பரிசு அறிவித்துள்ளது.
பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடந்து வரும் 33-வது ஒலிம்பிக் போட்டியில் 7-வது நாளான நேற்று துப்பாக்கி சுடுதலில் ஆண்களுக்கான 50 மீட்டர் ரைபிள் (3 நிலை) இறுதிச்சுற்றில் இந்திய வீரர் ஸ்வப்னில் குசாலே வெண்கலம் வென்றுள்ளார். இவர் ஒலிம்பிக் வரலாற்றில் 50 மீட்டர் துப்பாக்கி சுடுதலில் முதல் பதக்கம் பெற்ற இந்திய வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார்.
இந்தியாவுக்கு பாரீஸ் ஒலிம்பிக் போட்டியில் இதுவரை கிடைத்துள்ள 3 பதக்கங்களும் துப்பாக்கி சுடுதலில் கிடைத்துள்ளன. இந்தியா ஒலிம்பிக் வரலாற்றில் துப்பாக்கி சுடுதலில் இரண்டுக்கும் மேற்பட்ட பதக்கங்களை வெல்வது இதுவே முதல் முறை ஆகும். இந்த பெருமையை ஸ்வப்னில் குசாலே, மனு பாக்கர் மற்றும் சர்ப்ஜோத் சிங் ஆகியோருடன் இணைந்து பெற்றுள்ளார்.
துப்பாக்கி சுடுதலில் வெண்கலப் பதக்கம் வென்ற ஸ்வப்னில் குசாலேக்கு மகாராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டே ரூ.1 கோடி பரிசுத்தொகை அறிவித்துள்ளார். ஸ்வப்னில் குசாலே மற்றும் அவரது பயிற்சியாளர்கள் திபாலி தேஷ்பாண்டே மற்றும் விஸ்வஜித் ஷிண்டே ஆகியோருடன் முதல்வர் ஏக்நாத் ஷிண்டே காணொலி காட்சி வாயிலாக பேசினார்.
ஏக்நாத் ஷிண்டே,
“இந்த பதக்கம் மகாராஷ்டிராவுக்கு பெருமையையும் மகிழ்ச்சியையும் தந்துள்ளது. ஸ்வப்னில் 0.1 புள்ளி வித்தியாசத்தில் வெள்ளிப் பதக்கத்தைத் தவறவிட்டார். ஆயினும், அவரது வெண்கலப் பதக்கம் ஒவ்வொரு மராட்டியருக்கும் புன்னகையை வரவழைத்துள்ளது. மகாராஷ்டிரா 72 ஆண்டுகளுக்கு பிறகு தனிநபர் பிரிவில் பதக்கம் பெற்றுள்ளது. ஸ்வப்னிலுக்கு ரூ.1 கோடி பரிசு வழங்கப்படும்”
என்று தெரிவித்துள்ளார்.