மும்பை,
மகாராஷ்டிராவில் விவசாயிகள் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுப பட்டுள்ளனர். இதற்கிடையே மாநில முதல்வருடன் நடைபெற்ற பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததால் விவசாயிகள் போராட்டம் தீவிரம் அடைந்துள்ளது.
மகாராஷ்டிராவில், முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் தலைமையிலான பா.ஜ.க. ஆட்சி நடை பெற்றுவருகிறது. இங்குள்ள விவசாயிகள் விவசாய கடன்களை தள்ளுபடி செய்யக்கோரியும், விளைபொருட்களுக்கு தகுந்த விலை நிர்ணயிக்க வலியுறுத்தியும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
தமிழகத்தை தொடர்ந்து மகாராஷ்டிராவிலும் விவசாயிகளின் போராட்டம் தீவிரம் அடைந்துள்ளது.
மகாராஷ்டிரா மாநிலத்தில் வறட்சி காரணமாக விவசாயம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. அதன் காரணமாக விவசாயிகள், வங்கிகளில் வாங்கிய பயிர்க் கடன்களைத் தள்ளுபடி செய்ய வேண்டும் என்றும், பயிர்களுக்கு கொள்முதல் விலையை அதிகரிக்க வேண்டும் போன்ற பல்வேறு கோரிக்கைகளை நீண்ட காலமாக அரசுக்கு வலியுறுத்தி வந்தனர்.
ஆனால், அவர்களின் கோரிக்கைகளை மாநில அரசு கண்டுகொள்ளவில்லை. எனவே விவசாயிகள் காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
மகாராஷ்டிராவின் பல மாவட்டங்களில் கடந்த வியாழக்கிழமை முதல் விவசாயிகள் போராட்டம் தீவிரம் அடைந்துள்ளது.
அதன் தொடர்ச்சியாக ஷீர்டியில் சாலையில் லாரியில் இருந்து பாலை கொட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பால் கொள்முதல் விலையை உயர்த்தி தர வலியுறுத்தி விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்
சில விவசாயிகள் நாகர் மாவட்டத்தில் உள்ள கோரேகாங்கில் பால் செலுத்துகின்ற டாங்கர் குழாய்களை அடைத்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதன் காரணமாக மும்பை மற்றும் புனே போன்ற நகரங்கள் உள்பட மகாராஷ்டிராவின் பல மாவட்டங்களில் பால் தட்டுப்பாடு ஏற்படும் நிலை உருவாகி உள்ளது.
இந்த காலவரையற்ற போராட்டம், தங்கள் கோரிக்கையை நிறைவேற்றும் வரை தொடரும் என விவசாயிகள் எச்சரித்துள்ளனர்.
சுமார் ஏழு மாவட்டங்களில் போராட்டம் நடைபெற்றுவருகிறது. மாநில முதல்வர் விவசாயி களைச் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனாலும் பேச்சுவார்த்தையில் எந்தவித உடன்பாடும் ஏற்படவில்லை.
இதன் காரணமாக விவசாயிகள் சந்தைகளுக்கு அனுப்பும் காய்கறி, பழங்கள், பால் போன்றவற்றை நிறுத்தி விட்டனர். மகாராஷ்டிர நகரங்களுக்கு காய்கறி, பழங்களை ஏற்றிச் செல்லும் வாகனங்களும் நிறுத்தப்பட்டு விட்டன. மீறி செல்லும் வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டன.
விவசாயிகளின் கஷ்டம் நகரத்தில் உள்ளவர்களுக்கும் தெரிய வேண்டும் என்றும், விவசாயி களின் வேதனை நகர மக்களுக்கும் புரியவேண்டும் என்றும், அவர்களும் நடவடிக்கை எடுக்க மாநில அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று விவசாயிகள் தரப்பில் தெரிவித்துள்ளனர்.
விவசாயிகளின் இந்தப் போராட்டத்தால், மகாராஷ்டிரா முழுவதும் காய்கறிகள், பழங்கள், பால் உள்ளிட்டவற்றுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளது.