மும்பை
தனியார்கள் லாப நோக்கமின்றி பள்ளிகளை தொடங்கலாம் என்னும் மகாராஷ்டிரா அரசின் யோசனை சர்ச்சையை உண்டாக்கி உள்ளது.
மகாராஷ்டிரா அரசு பள்ளிகளை மேம்படுத்த தனது கல்விக் கொள்கையில் சில மாறுதல்களை அறிவிக்க உள்ளது. இது குறித்து சட்டம் இயற்ற ஒரு மசோதாவை அரசு தயார் செய்துள்ளது. அந்த மசோதா அடுத்து வரும் சட்டமன்றக் கூட்டத் தொடரில் அரசால் சமர்ப்பிக்கப்பட உள்ளது. தற்போது அந்த மசோதாவில் உள்ள சில கருத்துக்கள் மாநிலக் கல்வியாளர்களிடையே கடும் சர்ச்சையை உண்டாக்கி உள்ளது.
அந்த மசோதாவில், “லாப நோக்கம் இல்லாமல் எந்த ஒரு நிறுவனமும் பள்ளிகள் தொடங்க அனுமத்திக்கப் படும். இந்தப் பள்ளிகளுக்கு அரசு உதவி வழங்கப்பட மாட்டாது. நிறுவனங்கள் தங்களது மற்ற தொழில் அல்லது வர்த்தகத்தில் இருந்து கிடைக்கும் பணத்தைக் கொண்டு இந்த பள்ளிகளை உருவாக்க வேண்டும். ஆசிரியர்கள், ஊழியர்கள் தவிர பங்கு தாரர்கள் யாருக்கும் பங்குத் தொகை தரக் கூடாது” எனக் குறிப்பிடப் பட்டுள்ளது. தவிர ஏற்கனவே பல தொண்டு நிறுவனங்கள் பள்ளிகளை நடத்தி வருவதையும் இந்த மசோதா சுட்டுக் காட்டி உள்ளது.
ஆனால் பொதுமக்கள் மற்றும் கல்வியாளர்களிடையே இது அதிருப்தியை உண்டாக்கி இருக்கிறது. லாபமற்ற நோக்கம் எனச் சொல்லப்பட்டாலும் இது கல்வியை வியாபார மயமாக்குதலின் முதல் படியே என பலரும் சொல்கின்றனர். மகாராஷ்டிராவின் கல்வியாளரும் சமூக ஆர்வலருமான கிஷோர் தரக், “ஒரு தொண்டு நிறுவனம் என்றால் அதை நிர்வகிப்பவர்கள் தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். அது மட்டுமின்றி அரசுப் பிரதிநிதிகளும் அதில் இடம் பெறுவார்கள். நிறுவனம் என்றால் தேர்தலும் நடக்காது, அரசுப் பிரதிநிதிகளும் இடம் பெற மாட்டார்கள்.
ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்களுக்கு வழங்கப்படும் ஊதியம் செலவாகக் காட்டப்படுவதால் லாபம் இல்லை என கூறவே முடியாது. மேலும் தொண்டு நிறுவனத்தில் உள்ளவர்களுக்கு எந்த ஒரு ஊதியமும் கிடையாது. தொண்டு நிறுவனங்கள் பள்ளிகளை மூட 18 மாதம் நோட்டிஸ் அளிக்க வேண்டும். ஆனால் இந்த நிறுவனங்களுக்கு அப்படி இல்லை. நிறுவனச் சட்டத்தின் படி 3 மாத நோட்டிசில் பள்ளிகளை மூட முடியும்” எனத் தெரிவித்துள்ளார்.
மகாராஷ்டிரா மாநில மேல் சபை உறுப்பினரும், ஆசிரியர் தொகுதியில் தேர்ந்தெடுக்கப் பட்டவருமான கபில் பாடில், “இந்த சட்டம் நிறைவேறினால் ஏற்கனவே உள்ள பல அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை குறையும். அதனால் இந்தப் பள்ளிகள் படிப்படியாக மூடப்படும். தனியார்ப் பள்ளிகளின் மோகம் ஏற்கனவே அதிகரித்துள்ள இந்த வேளையில் அரசே தனியார் பள்ளிகள் துவங்க ஊக்குவிப்பது கண்டனத்துக்குரியது. அதே போல பகலில் பணி புரிந்துவிட்டு இரவில் கல்வி கற்கும் மாணவர்களீன் இரவுப் பள்ளிகளும் மூடப்படும் அபாயமும் உண்டு” எனத் தெரிவித்துள்ளார்.
அரசு தரப்பிடம் இருந்து இதுவரை எந்த ஒரு கருத்தும் தெரிவிக்கப்படவில்லை.