மும்பை: மகாராஷ்டிராவில் ஊரடங்கு படிப்படியாக தளர்த்தப்பட்டு வருவதாக முதலமைச்சர் உத்தவ் தாக்கரே கூறி உள்ளார்.
மகாராஷ்டிரா மாநிலம் தான் கொரோனா வைரசால் அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலம் ஆகும். இங்கு பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 6 லட்சத்தை நெருங்கி இருக்கிறது.
இதேபோல பலியானவர்கள் எண்ணிக்கையும் 20 ஆயிரத்தை நெருங்கி இருக்கிறது. இந் நிலையில் முதலமைச்சர் உத்தவ் தாக்கரே மருத்துவ குழுவினருடன் வீடியோ கான்பரன்சிங்கில் பேசினார்.
அப்போது அவர் ஊரடங்கை முழுமையாக தளர்த்த அவசரம் காட்ட விரும்பவில்லை என்று கூறினார். மேலும் அவர் கூறியதாவது: கொரோனாவில் இருந்து எப்போதும் விடுபடுவோம் என்பதை காட்டிலும் ஊரடங்கை எப்படி தளர்த்துகிறோம் என்பதே முக்கியம்.
ஊரடங்கை அவசரமாக தளர்த்தியவர்கள் எல்லோரும் மீண்டும் ஊரடங்கை பிறப்பித்து இருக்கின்றனர். மாநிலத்தில் 2வது கொரோனா அலையை விரும்பவில்லை. மாநில அரசின் மிஷன் பிகன் அகய்ன் என்ற திட்டத்தின் மூலம் ஊரடங்கு படிப்படியாக தளர்த்தப்பட்டு வருகின்றன என்று பேசினார்.