மும்பை:

பாராளுமன்ற தேர்தலையொட்டி மகாராஷ்டிரா மாநிலத்தில், பாஜக, சிவசேனை இடையே மீண்டும் கூட்டணி இறுதி செய்யப்பட்டடு ஒப்பந்தம் கையெழுத்தானது.

இந்த நிலையில், பாராளுமன்ற தேர்தலுக்கு பிறகு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் முதல்வர் பதவி குறித்து இரு கட்சிகளுக்கும் இடையே முட்டல் மோதல் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக பாஜக சிவசேனை கூட்டணி முறியும் சூழல் ஏற்பட்டுள்ளது.

பாஜக கூட்டணி கட்சியான சிவசேனா, பாஜகவை கடந்த சில ஆண்டுகளாக கடுமையாக தாக்கி வந்த நிலையிலும், மீண்டும் நாடாளுமன்ற தேர்தலுக்காக கூட்டணி அமைத்தது.

அதன்படி மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள 48 பாராளுமன்ற தொகுதிகளில், பாஜக 25 தொகுதிகளிலும், சிவசேனா 23 தொகுதிகளிலும் போட்டியிடுவது என்று முடிவு செய்யப்பட்டது. அதைத்தொடர்ந்த இரு கட்சிகளிடையே கூட்டணி உடன்பாடு செசய்யப்பட்டு பாஜக தேசிய தலைவர் அமித்ஷா, மகாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர பட்னாவீஸ், சிவசேனா தலைவர்  உத்தவ் தாக்கரே மூவரும் கூட்டாக அதிகாரப்பூர்வ அறிவிப்பை  வெளியிட்டனர்.  மக்களவைத் தேர்தலை போல், சட்டசபை தேர்தலும் கூட்டணி என்றனர்.

ஆனால், கூட்டணி அறிவிக்கப்பட்டு ஓரிரு நாளில் மீண்டும் இரு கட்சி தலைவர்களி டையே  முட்டல் ஏற்பட்டடது. கூட்டணி சம்பந்தமாக சிவசேனா இரண்டு நிபந் தனைகள் விதித்ததாகவும், அதன்படி பாஜக நடந்து கொள்ள வேண்டும் என்றும் விமர்சிக்கப்பட்டது.

இதற்கு பதில் அளித்தபாஜக தலைவர் சந்திரகாந்த் பாடில், சட்டசபை தேர்தலில் எந்தக் கட்சி அதிக இடங்களில் வெற்றி பெறுகிறதோ அந்தக் கட்சி முதல்வர் பதவியை எடுத்துக் கொள்ளலாம் என்று  கூறியிருந்தார்.

ஆனால், இதற்கு சிவசேனா தரப்பில் கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. இதுகுறித்து கூறியுள்ள  சிவசேனா தலைவர் ராம்தாஸ் கடாம், இரு கட்சிகளுக்கு இடையே போடப்பட்டுள்ள  ஒப்பதந்தத்தில் இரண்டு முக்கிய நிபந்தனைகள் மட்டுமே முன் வைக்கப்பட்டன.

1) கொன்கான் பகுதியில் உள்ள, நானார் சுத்திகரிப்புத் திட்டத்தை அகற்றுவது.

2) முதல்வர் பதவியை இருவரும் ஆளுக்கு பாதிக்காலம் வகிப்பது. அதாவது, பாஜக, சிவசேனா தலா இரண்டரை ஆண்டுகள் முதல்வர் பதவியில் இருப்பார்கள்.

இந்த நிபந்தனையை ஒப்புக்கொள்ளாவிட்டால் கூட்டணியில் இருந்து விலகிக் கொள்ளலாம் என்று மிரட்டல் விடுத்துள்ளார்.

சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே, ஒப்பந்தப்படி முதல்வர் பதவியை இரு கட்சிகளும் பிரித்துக்கொள்ள வேண்டும் என்றும், இதில் வேறு எந்த  மாற்றமும் இல்லை என்று தெரிவித்து உள்ளார்.

இதன் காரணமாக இரு கட்சிகளிடையே மீண்டும் சலசலப்பு ஏற்பட்டுள்ளது. பாஜக சிவசேனா கூட்டணி தொடருமா அல்லது தேர்தலுக்கு முன்பேயே முறிந்துவிடுமா என்ற எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.