மும்பை

கொரோனா பரவுதல் தீவிரமாக இருக்கும் மகாராஷ்டிராவில் அரசு ஊழியர் வாரம் ஒரு நாள் அலுவலகம் வராவிடில் ஊதியம் பிடித்தம் செய்யப்படும் என முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

இந்தியாவில் கொரோனா தொற்றில் மகாராஷ்டிர மாநிலம் முதல் இடத்தில்  உள்ளது. இங்கு இதுவரை கிட்டத்தட்ட 77 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டு அதில் 2700 க்கும் மேற்பட்டோர் உயிர் இழந்துள்ளனர்.  இதுவரை 33 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் மட்டுமே குணம் அடைந்துள்ளனர்.  இங்கு மும்பை நகரில் பாதிப்பு மிக அதிகமாக உள்ளது.

இந்நிலையில் மகாராஷ்டிர முதல்வர் இன்று பிறப்பித்துள்ள உத்தரவில், “மகாராஷ்டிர மாநில அரசின் அனைத்துத் துறைகளின் தலைவர்களும் தங்கள் துறைகளின் கீழ் பணியாற்றும் அதிகாரிகள், ஊழியர்களின் பட்டியலை உடனைய்டாக தயாரிக்க வேண்டும். இவர்களில்  மருத்துவ விடுப்பு மற்றும் கொரோனா காரணமாக வயதின் அடிப்படையில் விடுப்பில் உள்ள ஊழியர்கள் தவிர்த்து அனைத்து ஊழியர்களும் வாரத்துக்கு ஒருமுறை கண்டிப்பாக அலுவலகத்துக்கு வந்து பணியாற்ற வேண்டும்.

அப்படி வாரம் ஒருமுறை கூட அலுவலகத்துக்கு வராத   ஊழியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கையும், ஊரடங்கு காலத்தில் அனுமதியில்லாமல் சென்ற ஊழியர்கள் மீதும் துறை நடவடிக்கை எடுக்கப்படும்.

அரசு ஊழியர்கள் தங்களுக்கு உயர் அதிகாரிகள் ஒதுக்கிய நாளில் பணிக்கு வராமல் இருந்தால் அந்த வாரம் முழுவதும் விடுப்பு எடுத்ததாகக் கணக்கில் கொள்ளப்பட்டு ஊதியப் பிடித்தம் செய்யப்படும் என எச்சரிக்கை செய்யப்படுகிறார்கள்.  வரும் 8 ஆம் தேதி முதல் இந்த விதிமுறை அமலுக்கு வருகிறது” என அறிவிக்கப்பட்டுள்ளது.