மகாராஷ்டிரா மாநிலம் சிந்துதுர்க் மாவட்டத்தில் உள்ள ராஜ்கோட் கோட்டையில் நிறுவப்பட்ட சத்ரபதி சிவாஜி சிலை இன்று சரிந்து விழுந்தது.
2023ம் ஆண்டு டிசம்பர் 4ம் தேதி கடற்படை தினத்தை ஒட்டி மால்வானில் இந்த சிலையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்.
கடந்த சில நாட்களாக மகாராஷ்டிரா மாநிலத்தில் கடும் மழை மற்றும் சூறைக்காற்று வீசி வரும் நிலையில் 35 அடி உயர இந்த சிவாஜி சிலை இன்று மதியம் 1 மணியளவில் சரிந்து விழுந்தது.
இந்த சிலையை கட்டமைத்த மாநில அரசும் கட்டுமான பணியை மேற்கொண்ட ஒப்பந்த நிறுவனமும் இதன் தரத்தை உறுதிசெய்யவில்லை என்று எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டியுள்ளன.
பிரதமர் நரேந்திர மோடியை வைத்து சிலை திறப்பு ஈவெண்ட் நடத்துவதிலேயே அரசு கவனம் செலுத்தியது.
மகாராஷ்டிரா அரசு டெண்டர்களுக்கான கமிஷன் பெற்றுக்கொண்டு ஒப்பந்தங்களை வழங்குகிறது என்று NCP SP மாநில தலைவரும் முன்னாள் அமைச்சருமான ஜெயந்த் பாட்டீல் குற்றம்சாட்டியுள்ளார்.
மாநில அரசு தனது பொறுப்பில் இருந்து தப்பிக்க முயற்சி செய்யாமல். சிலை கட்டுவதற்கும், அமைப்பதற்கும் காரணமானவர்கள் குறித்து முழுமையாக விசாரணை நடத்த வேண்டும் என்று சிவசேனா UBT எம்.எல்.ஏ வைபவ் நாயக் தெரிவித்துள்ளார்.
இந்த விவகாரத்தில் முழுமையான விசாரணை நடத்தப்படும் என்று கூறியுள்ள அம்மாநில பொதுப்பணித்துறை அமைச்சர் ரவீந்திர சவான், கடல் கோட்டை கட்டும் சத்ரபதி சிவாஜியின் தொலைநோக்கு முயற்சிகளுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக பிரதமர் மோடியால் திறந்து வைக்கப்பட்ட இந்த சிலை அதே இடத்தில் மீண்டும் அமைக்கப்படும் என்று கூறியுள்ளார்.