மகாராஷ்டிரா:
நாட்டில் முதன்முறையாக மகாராஷ்டிர மாநிலத்தில் பீடி, சிகரெட் சில்லறை விற்பனைக்கு அம்மாநில அரசு தடை விதித்துள்ளது.
சிகரெட் மற்றும் பிற புகையிலை பொருட்களின் பிரிவு 7 சட்டம் 2003 இன் கீழ் (விளம்பரம் மற்றும் வர்த்தக மற்றும் வர்த்தக உற்பத்தி, வழங்கல் மற்றும் விநியோகத்தை கட்டுப்படுத்துதல்} சிகரெட் மற்றும் பீடிகளை சில்லறை விற்பனை செய்வதற்கு மகாராஷ்டிர அரசு தடை விதித்துள்ளது.
இந்த உத்தரவை அம்மாநில சுகாதார முதன்மை செயலாளர் பிரதீப் வியாஸ் பிறப்பித்துளளார். புகைப்பிடித்தலின் தீமை மற்றும் புற்றுநோய் குறித்து எச்சரிக்கும் படங்கள் இடம்பெற்றிருக்கும் சிகரெட், பீடி பாக்கெட்டுகளை அப்படியே விற்காமல், தனித்தனியே விற்பதால் போதிய விழிப்புணர்வு ஏற்படுத்த இயலாது என்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.
இதன் மூலம் முழு சிகரெட் பாக்கெட்டை வாங்கும் பொருளாதாரம் இல்லாத 16 முதல் 17 வயதுள்ள இளைஞர்களிடம் புகைப்பிடிக்கும் பழக்கம் குறையும் என நம்பப்படுகிறது. முன்னதாக புகையிலை பொருட்கள் மீதான வரி 10 சதவீதம் உயர்த்தப்பட்ட போது, புகைபிடிப்போரின் வீதம் 8 சதவீதம் வரை குறைந்ததாகவும் மும்பை டாட்டா மருத்துவமனையின் புற்றுநோய் நிபுணர் மருத்துவர் பங்கஜ் சதுர்வேதி தெரிவித்துள்ளார்.