டெல்லி: மகாராஷ்டிரா, ஜார்க்கண்ட் மாநில சட்டசபை தேர்தல் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. காலை 7மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி நிலையில், மாலை 5மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும்.
மகாராஷ்டிரா சட்டசபையின் பதவிக்காலம் நவம்பர் 26-ம் தேதியுடன் முடிவடையும் நிலையில், ஜார்கண்ட் மாநிலத்தின் பதவிக்காலம் 2025 ஜனவரி 5-ம் தேதியுடன் முடிவடைகிறது. அதைத்தொடர்ந்து, மகாராஷ்டிரா சட்டமன்றத் தேர்தல் நவம்பர் 20, 2024 அன்று நடைபெறும் என்று தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் அறிவித்தார். ஜார்க்கண்ட் சட்டமன்றத் தேர்தல் நவம்பர் 13 மற்றும் 20 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடைபெறும்‘ என்றும் தேர்தல் வாக்கு எண்ணிக்கை நவம்பர் 23-ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
அதன்படி, இன்று மகாராஷ்டிரா மாநிலம் மற்றும் ஜார்கண்ட் மாநில 2வது கட்ட சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.
288 தொகுதிகளை கொண்ட மகாராஷ்டிரா மாநிலத்தில் இன்று ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. தேர்தலில் 528 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இன்றைய தேர்தலில் வாக்களிக்க தகுதியானவர்கள் 9 கோடியே 70 லட்சத்து 25 ஆயிரத்து 119 பேர். மகாராஷ்டிராவில் பா.ஜனதா, சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் ஆகிய கட்சிகள் அடங்கிய ஆளும் மகாயுதி கூட்டணியும், காங்கிரஸ், உத்தவ் சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் (எஸ்.பி.) ஆகிய எதிர்க்கட்சிகள் அடங்கிய மகாவிகாஸ் அகாடி கூட்டணியும் நேரடியாக மோதுகின்றன. அங்கு ஆட்சியை கைப்பற்றப்போவது யார் என்ற கேள்வி எழுந்துள்ளது.
அதுபோல, 81 தொகுதிகளை கொண்ட ஜார்கண்ட் மாநில சட்டசபைத் தேர்தல் 2 கட்டங்களாக நடைபெறும் என்று தேர்தல் கமிஷன் அறிவித்து இருந்தது. இதன்படி 43 தொகுதிகளுக்கான முதல் கட்ட தேர்தல் கடந்த 13-ந்தேதி நடந்தது. மீதமுள்ள 38 தொகுதிகளுக்கும் இன்று 2-வது கட்ட தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.
இன்றைய தேர்தலில், 9 கோடியே 70 லட்சத்து 25 ஆயிரத்து 119 வாக்காளர்கள் ஓட்டுப்போட தகுதியானவர்கள். காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 6 மணி வரை ஓட்டுப்பதிவு நடைபெற உள்ளது. தேர்தலையொட்டி இரு மாநிலங்களிலும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.