மும்பை
மகாராஷ்டிரா மாநிலத்தில் 10 மாதங்களில் 13000 குழந்தைகள் மரணம் அடைந்துள்ளதாக தகவல் அறியும் சட்டத்தின் கீழ் அரசின் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது
நாடெங்கும் குழந்தைகள் மரணம் அடைவது அதிகரித்து வருகிறது. கடந்த வருடம் கோரக்பூரில் அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் பல குழந்தைகள் மரணம் அடைந்தன. அதை ஒட்டி சமூக ஆர்வலர்கள் குழந்தைகள் மரணம் குறித்து கேள்விகள் எழுப்பத் தொடங்கி உள்ளனர். மகாராஷ்டிராவை சேர்ந்த சமூக ஆர்வலர் ஒருவர் மகாராஷ்டிராவில் குழந்தைகள் மரணம் பற்றி தகவல் அறியும் சட்டத்தின் கீழ் அரசிடம் கேட்டிருந்தார்.
அதற்கு மகாராஷ்டிரா அரசின் சுகாதாரத்துறை பதில் அளித்துள்ளது. அந்த பதிலில், “கடந்த 2017ஆம் வருடம் ஏப்ரல் மாதம் முதல் இந்த வருடம் பிப்ரவரி மாதம் வரை 13541 குழந்தைகள் மரணம் அடைந்துள்ளன. இறந்த குழந்தைகளில் 54% ஆண் குழந்தைகளும், 46% பெண் குழந்தைகளும் ஆவார்கள். இவற்றில் 65% குழந்தைகள் பிறந்து 28 நாட்களுக்குள் இறந்துள்ளன. மேலும் 21% குழந்தைகள் 28 நாட்களில் இருந்து ஒரு வயதுக்குள்ளும் 14% குழந்தைகள் ஒரு வயதுக்கு பிறகும் மரணமடைந்துள்ளனர்.” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.