மகா கும்பமேளா கூட்ட நெரிசலில் உயிரிழந்தர்வர்களுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

உத்திர பிரதேச மாநிலம் ப்ரயாக்ராஜ் நகரில் நடைபெற்று வரும் மகா கும்பமேளா நிகழ்ச்சியில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் பலர் உயிரிழந்துள்ளனர்.

இன்று அதிகாலை 2 மணியளவில் நடைபெற்ற இந்த சம்பவம் குறித்து இதுவரை நான்கு முறை உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத்துடன் நேரடியாக தொலைபேசி மூலம் பிரதமர் மோடி விவரங்களை கேட்டறிந்தார்.

திரிவேணி சங்கமத்தின் மூக்கு பகுதியை நோக்கி ஒரே நேரத்தில் பல லட்சம் பேர் திரண்டதால் தடுப்பு சுவர் உடைந்து நூற்றுக்கணக்கானோர் தவறி விழுந்ததாகவும் பின்னால் இருந்தவர்கள் அவர்களை ஏறி மிதித்து சென்றதாகவும் கூறப்படுகிறது.

இந்த நெரிசலில் சிக்கி 30க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாகவும் 200க்கும் அதிகமானோர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

அதேவேளையில், 15 முதல் 17 பேர் வரை உயிரிழந்ததாக வேறு சில தகவல்கள் கூறுகின்றன.

இந்த நிலையில், உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்து பிரதமர் மோடி தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார், அதில் இதுவரை எத்தனை பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறித்து அவர் எந்த தகவலும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து பிரதமர் வெளியிட்டிருக்கும் இரங்கல் செய்தியில், “பிரயாக்ராஜ் மகா கும்பத்தில் நடந்த விபத்து மிகவும் வருத்தமளிக்கிறது. இதில் தங்களின் அன்புக்குரியவர்களை இழந்து வாடும் பக்தர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். இத்துடன் காயமடைந்தவர்கள் அனைவரும் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன். உள்ளூர் நிர்வாகம் உதவுவதில் ஈடுபட்டுள்ளது. இது தொடர்பாக, பாதிக்கப்பட்டவர்களிடம், மாநில முதல்வர் யோகியுடன் தொடர்ந்து பேசி வருகிறேன்,” என்று மோடி குறிப்பிட்டுள்ளார்.