மும்பை: மராட்டிய மாநிலத்தில், 9 முதல் 12ம் வகுப்பு வரை பயிலும் மாணாக்கர்களுக்கு, நவம்பர் 23ம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படுமென அறிவித்துள்ளது அம்மாநில அரசு.
மராட்டிய மாநில முதல்வர் உத்தவ் தாக்கரேவுடனான வீடியோ நிகழ்ச்சியின்போது இதை தெரிவித்தார் அம்மாநில கல்வி அமைச்சர் வர்ஷா கெய்க்வாட்.
அந்த நிகழ்ச்சியில் முதலமைச்சர் பேசியதாவது, “தீபாவளிக்குப் பிறகு நாம் கூடுதல் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். பள்ளிகளில் உள்ள தனிமைப்படுத்தல் மையங்களை நாம் மூட முடியாத நிலையில் உள்ளோம்.
எனவே, வகுப்புகளை நடத்துவதற்கான மாற்று இடங்களை உள்ளூர் நிர்வாகங்கள் தேர்வுசெய்ய வேண்டும். பள்ளிகளை சுத்தம் செய்தல், ஆசிரியர்களுக்கு கொரோனா பரிசோதனை நடத்துதல் மற்றும் இதர முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் முக்கியம்” என்றார் அவர்.
கல்வியமைச்சரின் கூற்றுப்படி, அனைத்துப் பள்ளி ஆசிரியர்களும் நவம்பர் 17 முதல் 22ம் தேதிக்குள் ஆர்டி-பிசிஆர் பரிசோதனைக்கு உட்பட வேண்டும். மேலும், உடல்நலன் பாதிக்கப்பட்ட மாணாக்கர்கள் மற்றும் அப்படி பாதிக்கப்பட்ட குடும்பங்களைச் சேர்ந்த மாணாக்கர்கள், பள்ளிகளுக்கு வர வேண்டாமென கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.