திருவண்ணாமலை: காத்திகை மாத தீபத்திருநாளையொட்டி, அண்ணாமலையார் குடிகொண்டிருக்கும் 2,668 அடி உயர மலை உச்சியில் நாளை மகா தீபம் ஏற்றப்பட உள்ளது. இதையொடி, மகாதீபம் ஏற்றப்படும் கொப்பரைக்கு இன்று அண்ணாமலையார் கோவிலில் சிறப்பு பூஜை நடைபெற்றது. அதையடுத்து, கொப்பரையை கோவில் ஊழியர்கள், இன்று மலைக்கு எடுத்துச் சென்றனர்.
திருவண்ணாமலை மாலை மகா தீபத்தையொட்டி, லட்சக்கணக்கானோர் திருவண்ணாமலையில் கூடுவர். தீப தரிசனத்தை கண்டு பக்தி பரவம் அடைந்து, அண்ணாமலையார் அருள் பெற்று செல்வது வழக்கம். ஆனால், கொரோனா தொற்று காரணமாக கடந்த 2வது வருடமாக, பக்தர்கள் தீப தரிசனத்தைக் காண மாநில அரசு தடை விதித்து உள்ளது.
இதையொட்டி, திருவண்ணாமலை நகருக்கான புதிய கட்டுப்பாடுகள் நேற்று (நவ.17) பிற்பகல் 1 மணி முதல் வரும் 20-ம் தேதி வரை அமலுக்கு வந்துள்ளது.
இதுகுறித்து வேலூர் சரக டிஐஜி ஏ.ஜி.பாபு கூறும்போது, திருவண்ணாமலைக்கு இன்று (நவ.18) முதல் 20-ம் தேதி வரை வழக்கமாக இயக்கப்படும் பேருந்துகளின் எண்ணிக்கையில் 50% குறைக்கப்பட்டுள்ளது. தீப விழா நிகழ்வுகள் சமூக ஊடகங்களில் நேரலை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதுவரை வழங்கப்பட்டு வந்த பாஸ் வழங்கும் நடைமுறை இன்று (நவ.18) முதல் 20-ம் தேதிவரை நிறுத்தப்பட்டு உள்ளது. கோயிலுக்குள் பக்தர்கள் யாரும் அனுமதிக்கப்பட மாட்டார்கள். 5 ஆயிரம் போலீஸார் பணியில் ஈடுபடுவர்’’ என்று தெரிவித்து உள்ளார்.
இதற்கிடையில், அண்ணாமலையார் கோயில் கார்த்திகை தீபத் திருவிழா முக்கிய நிகழ்வாக நாளை மகாதீபம் மலையின் உச்சியில் ஏற்றப்படு கிறது.
தீபத் திருவிழாவின் ஒன்பதாவது நாளான இன்று அதிகாலை திருக்கோவிலினுள், பத்தாம் நாளான நாளை மாலை தீப மலையின் மீது ஏற்றப்படும் மகா தீபத்தை முன்னிட்டு, தீபக் கொப்பரைக்கு, சிறிய நந்தி சந்நதிக்கு முன்பு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, பின்னர் ஊழியர்கள் 15 பேர் மூலமாக 2,668 அடி உயரம் கொண்ட மலை உச்சியின் மீது மகாதீப கொப்பரையை தோளில் சுமந்தபடி சென்றனர்.
5.9 அடி உயரமும், 250 கிலோ எடையும் கொண்ட இந்த மகா தீப கொப்பரையானது பஞ்சலோகத்தால் பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகிய மூன்று அடுக்குகளாக செய்யப்பட்டது. மகாதீப கொப்பரையில் ஆன்மீக பக்தர்கள் காணிக்கையாக வழங்கப்படும் 3,500 லிட்டர் நெய் மற்றும் 1000 மீட்டர் காடா துணிகளைப் பயன்படுத்தி நாளை மாலை 6 மணிக்கு மகா தீபம் ஏற்றப்பட உள்ளது.
முன்னதாக நாளை அதிகாலை 4 மணியளவில் கோயிலில் பரணி தீபம் ஏற்றப்படும். தொடர்ந்து வழக்கமான பூஜைகள் நடைபெறும். பின்னர் , மாலை 6 மணியளவில் கோயில் தீப தரிசன மண்டபத்தின் முன்பாக ஆணும், பெண்ணும் சமம் என்பதை எடுத்துரைக்கும் வகையில் அர்த்த நாரீஸ்வரர் காட்சியளிக்கும் நிகழ்வும் நடைபெறும். அதே நேரத்தில் 2,668 அடி அண்ணாமலை உச்சியில் மகா தீபமும் ஏற்றப்படுகிறது.