சென்னை:

நிலவில் விக்ரம் லேண்டர் விழுந்து நொறுங்கிய இடத்தை கண்டுபிடித்தவர் சண்முக சுப்பிரமணியன் என்ற பொறியாளர் என்பது தெரிய வந்துள்ளது. மதுரையைச் சேர்ந்த தமிழரான  சண்முக சுப்பிரமணியன்  சென்னையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார்.

இவர்தான், விக்ரம் லேண்டர் விழுந்த இடத்தை கண்டறிந்தார். அதை, அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா  ‘S’ என்று உறுதி செய்துள்ளது.

நிலவை ஆய்வு செய்வதற்காக இஸ்ரோ அனுப்பிய சந்திரயான் 2 விண்கலம் அனுப்பப்பட்ட விக்ரம் லேண்டர் நிலவில் இறங்கும்போது, எதிர்பாராதவிதமாக விழுந்து நொறுங்கியது. இதனார், அதனுடனான தொடர்பு துண்டிக்கப்பட்ட நிலையில், அதை கண்டுபிடிக்கும் முயற்சியில் இஸ்ரோ, நாசா உள்பட பலர் முயற்சி மேற்கொண்டுவந்தனர்.

இந்த நிலையில், நிலவின் படங்கள் மற்றும் விக்ரம் லேண்டர் விழுந்த இடங்கள் தொடர்பான ஆதாரங்களை நாசாவிடம் இருந்து பெற்ற மதுரை பொறியாளர் சண்முக சுப்ரமணியன்,  அதை ஆய்வு செய்து, விக்ரம் லேண்டர் விழுந்து நொறுங்கிய இடம், அதன் சிதறல்களை கண்டு பிடித்தார். இதை நாசாவுக்கு தெரியப்படுத்திய நிலையில், அவர்களும் ஆய்வு செய்து சண்முக சுப்பிரமணியன் கொடத்த தகவலை உறுதி செய்துள்ளனர்.

இதுகுறித்து நாசா வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், நாசாவின் லுனார் ரிகனைஸ்ஸான்ஸ் ஆர்பிட்டர் மூலம் விக்ரம் லேண்டர் தரையிறக்க திட்டமிடப்பட்ட இடத்தின் புகைப்படத்தை செப்டம்பர் 26ம் தேதி வெளியிட்டிருந்த தாகவும், இந்த புகைப்படங்களை பல ஆய்வாளர்கள் பதிவிறக்கம் செய்து ஆய்வு மேற்கொண்டு வந்ததாகவும் தெரிவித்து உள்ளது.

விக்ரம் லேண்டர் குறித்து,  ஆய்வு செத்த சண்முக சுப்ரமணியன் என்ற இந்திய பொறியாளர், தனது துல்லியமான ஆய்வுமூலம்  விக்ரம் லேண்டரின் உடைந்த பாகங்கள் இருக்கும் இடம் குறித்து நாசாவிற்கு தெரியப்படுத்தினார். அவரது தகவலின் அடிப்படையில் மேற்கொண்டு அந்த இடத்தை ஆய்வு செய்ததன் அடிப்படையில் விக்ரம் லேண்டரின் உடைந்த பாகங்கள் கூறிய இடத்தில் இருப்பதை நாங்கள் உறுதி செய்தோம் என தெரிவித்துள்ளனர்.

இதை நாசா தனது டிவிட்டர் பக்கத்தில்  பகிர்ந்துள்ளது. அதில் சண்முக சுப்பிரமணியன் கண்டறிந்த உடைந்த பாகங்கள் இருக்கின்ற இடத்தை ‘S’ என்று நாசா குறிப்பிட்டுள்ளது.

விக்ரம் லேண்டர் விழுந்து நொறுங்கிய இடத்தை கண்டுபிடிக்க இஸ்ரோ, நாசா என உலக நாடுகளின் ஆய்வாளர்கள் முயற்சி மேற்கொண்டு வந்த நிலையில்,  சுமார் 33 வயது  மதுரையைச் சேர்ந்த தமிழரான பொறியாளார் சண்முக சுப்பிரமணியன் கண்டுபிடித்துள்ளது  பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

சண்முக சுப்ரமணியனின் கண்டுபிடிப்பை பாராட்டி நாசா அவருக்கு மின்னஞ்சல் வாயிலாக பாராட்டுகளையும் தெரிவித்துள்ளது சுப்பிரமணியனின் கண்டுபிடிப்புக்கு பாராட்டுக்குள் குவிந்து வருகிறது..

தனது கண்டுபிடிப்பு குறித்து கூறியுள்ள சண்முக சுப்பிரமணியன், நாசா போன்ற விண்வெளி ஆய்வு மையங்கள் லேண்டரைக் கண்டுபிடிக்க முடியவில்லை என்று அறிவித்தது தனக்கு ஆர்வத்தை தூண்டியதாகவும், அதன் காரணமாகவே தான் நாசாவின் புகைப்படங்களைக் கொண்டு ஆய்வு செய்து கண்டுபிடித்ததாக தெரிவித்து உள்ளார்.