மதுரை
சென்னையில் தேர்ச்சி பெற்றோரைக் காத்திருப்பில் வைத்து உத்தரப்பிரதேசத்தில் தேர்ச்சி பெற்றோருக்கு ரயில்வே நிர்வாகம் பணி அளித்துள்ளது.
ரயில்வே பணியாளர் நியமன ஆணையம் அந்தந்த மண்டலங்களில் காலியாகும் பணியிடங்களுக்கு ஆட்களைத் தேர்வு செய்து பணியில் அமர்த்துவது வழக்கமாகும். ரயில்வே என்பது அகில இந்திய நிர்வாகத்தின் கீழ் வந்தாலும் அந்தந்த மாநிலங்களில் தேர்ச்சி பெற்றோருக்கு முதலில் பணி அளித்து விட்டு பிறகு மீதமுள்ள இடங்களில் மற்ற மாநிலத்தவருக்கு வாய்ப்பளிப்பது வழக்கமாகும்.
ஆனால் அந்த வழக்கம் தற்போது மீறப்பட்டுள்ளதாக மதுரை மக்களவை உறுப்பினர் சு வெங்கடேசன் தெரிவித்துள்ளார். அவர் விடுத்துள்ள அறிக்கையில் ”தெற்கு ரயில்வே உத்தரப்பிரதேசத்தில் கோரக்பூர் ரயில்வே தேர்வு வாரியத்தில் தேர்வு செய்யப்பட்ட 54 விண்ணப்பதாரர்களை உதவி ஓட்டுநர் பணிகளுக்கு நியமித்து தெற்கு ரயில்வேயின் சென்னை தேர்வு வாரியத்தில் தேர்வு செய்யப்பட்டு, காத்திருப்போர் பட்டியலில் உள்ளவர்களைப் புறக்கணித்து உத்தரவு பிறப்பித்துள்ளது.
உத்தரப் பிரதேச, கோரக்பூர் ரயில்வே தேர்வு வாரியத்தில் தேர்வு செய்யப்பட்ட 54 பேரின் மதிப்பெண்கள் தெற்கு ரயில்வேயில் காத்திருப்போர் பட்டியலில் உள்ள விண்ணப்பதாரர்களின் மதிப்பெண்களை விடக்குறைவு ஆகும். பிற மண்டலங்களில் தேர்வு செய்யப்பட்டவர்களை தெற்கு ரயில்வேயில் நியமிப்பது சட்டவிரோதம் ஆகும். டெக்னீசியன் பிரிவில் தெற்கு ரயில்வேக்கு விண்ணப்பித்தவர்களில் 60 சதவீதம் பேர் இந்தியில் தேர்வு எழுதி வந்தவர்கள் ஆவார்கள்.
இப்படி இருக்க தெற்கு ரயில்வேயில் காத்திருப்போர் பட்டியலில் உள்ளவர்களைப் புறக்கணித்து, கோரக்பூர் மண்டலத்தில் தேர்வு செய்யப்பட்டவர்களை நியமிப்பது கண்டனத்துக்குரியது. இதில் ரயில்வே அமைச்சர் உடனே தலையிட்டு அவர்களை கோரக்பூர் திருப்பி அனுப்ப வேண்டும். தென்னக ரயில்வே காத்திருப்போர் பட்டியலில் உள்ளவர்களை உதவி ஓட்டுநர் காலியிடங்களில் நிரப்பவேண்டும். உடனடியாக இந்த உத்தரவை உடனடியாக திரும்பப் பெறாவிட்டால், நேரடி போராட்டத்தில் இறங்குவோம்.” என எச்சரிக்கை விடுத்துள்ளார்.