மதுரை: மதுபான கடையை அகற்றக்கோரி போராட்டம் நடத்தியவர்கள் மீது வழக்கு போடுவதா? என காவல்துறையை கடுமையாக விமர்சித்த உயர்நீதிமன்றம் மதுரை கிளை, தமிழ்நாட்டிடல் 20 கி.மீக்கு ஒரு டாஸ்மாக் கடைதானா என இருக்கிறது என கேள்வி எழுப்பி தமிழ்நாடு அரசை கடுமையாக விமர்சித்தனர்.
தமிழ்நாடு முழுவதும் மாநில அரசு டாஸ்மாக் மதுபான கடைகளை தெருவுக்கு தெரு திறந்து மக்களை குடிக்காரர்களாக்கி வருகிறது. இந்த நிலையில், விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டையைச் சேர்ந்த ஞானதாஸ் உயர்நீதிமன்ற மதுரை கிளையில்ஒரு பொதுநல மனு தாக்கல் செய்திருந்தார். அவரது மனுவில், “விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை தாலுகா P.வாகைகுளம் கிராமத்தில் பட்டியல் சமுகத்தை சேர்ந்த 100க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இங்கு பல்வேறு வகுப்பினை சேர்ந்த மக்கள் வசித்து வருகின்றனர். அந்த பகுதியில் இதுவரை மதுபான கடைகள் இல்லாத நிலையில், அருகே உள்ள மேலையூர் கிராம நெடுஞ்சாலையில் செயல்பட்டு வந்த மதுபான கடை: 11910 P.வாகைகுளம் கிராமத்தில் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.
இதற்கு அந்த பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்தும், அதிகாரிகள் காவல்துறையினருடன் , P.வாகைகுளம் கிராமத்தில் மதுபான கடையை அமைத்துள்ளனர். மேலும் சிறுவர்கள், பெண்கள் சென்று வரக்கூடிய பாதையாகவும் உள்ளது.மேலும், இந்த கடையால், அந்த பகுதியில் ஒற்றுமையாக வசித்து வரும் வெவ்வேறு சமூகத்தினரிடையே மோதல் ஏற்பட வாய்ப்புள்ளது. மேலும் சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்பட வாய்ப்புள்ளது.
இந்த மதுபான கடையை அகற்றக்கோரி பல்வேறு அதிகாரிகளுக்கு மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லை. மேலும் மதுபான கடையை அகற்றக்கோரி போராட்டம் நடத்திய போது காவல்துறையினர் பொதுமக்கள் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். எனவே, விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை தாலுகா P.வாகைகுளம் கிராமத்தில் செயல்பட்டு வரும் மதுபானக் கடை 11910வை அகற்ற உத்தரவிட வேண்டும்.” என மனுவில் கூறியிருந்தார்.
இந்த மனு நீதிபதிகள் சுப்பிரமணியன், புகழேந்தி அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது மாநில டாஸ்மார்க் தரப்பில் ஆஜரான அரசு வழக்கறிஞர், மதுபான கடை உரிய அனுமதி பெற்று செயல்படுகிறது மேலும் 20 கிலோமீட்டர் தொலைவிற்கு எந்த மதுபான கடையும் கிடையாது என தெரிவிக்கப்பட்டது.
இதனையடுத்து நீதிபதிகள், 20 கிலோமீட்டர் தொலைவிற்கு ஒரு மதுபான கடை தான் உள்ளது என கூற, மதுபானம் பொதுமக்களுக்கு அத்தியாவசியம் தேவைப்படும் பொருளா? என கேள்வி எழுப்பியதுடன், அதுபோலத்தான் கடைகள் அமைக்கப்பட்டு உள்ளதா? என கடுமையாக சாடினர்.
மேலும், இந்த வழக்கு குறித்து உள்துறை, கலால் மற்றும் மதுவிலக்கு துறை கூடுதல் செயலர், விருதுநகர் மாவட்ட ஆட்சியர், விருதுநகர் டாஸ்மார்க் மேலாளர் ஆகியோர் தரப்பில் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை 4 வாரத்திற்கு ஒத்தி வைத்தனர்.
நீதிபதிகள் மாநில அரசை கடுமையாக விமர்சனம் செய்தது, அங்கிருந்த வழக்கறிஞர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியது.