மதுரை
மதுரை உயர்நீதிமன்றம் நீட் தேர்வில் வெற்றி பெற்றவருக்கு கல்லூரி ஒதுக்கிட்டில் குளறுபடி செய்ததாக மருத்துவக் கல்வி இயக்குநருக்கு ரூ. 5 லட்சம் அபராதம் விதித்துள்ளது.
அருணகிரி என்னும் மதுரை பழங்காநத்தத்தைச் சேர்ந்தவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் அளித்த மனுவில்,
” 2017- 18 ஆம் கல்வியாண்டில் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற என் மகளுக்கு, கல்லூரி ஒதுக்கீடு தொடர்பாக நடைபெற்ற கவுன்சிலிங் அறங்களை மீறி முறையற்ற விதத்தில் நடந்தது. இதில் பாதிக்கப்பட்ட எனது மகளின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு 50 லட்ச ரூபாயை இழப்பீடாக வழங்க வேண்டும்”
எனக் கோரி 2017ம் ஆண்டு மனுவினைத் தாக்கல் செய்திருந்தார்.
இன்று இந்த வழக்கு நீதிபதி சரவணன் முன்பு விசாரணைக்கு வந்தபோது நீதிபதி,
“நல்ல மதிப்பெண்களுடன் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவிக்கு அரசு கல்லூரியில் இடம் வழங்கப்படவில்லை. அதோடு அவர்கள் செலுத்திய கட்டணத்தை திரும்ப வழங்க வேண்டும் என்றால் கல்வியை இடைநிறுத்தம் செய்வதாக மனு அளிக்குமாறு கட்டாயப்படுத்தப்பட்டுள்ளார். கலந்தாய்வில் மனுதாரருக்கு ஒதுக்கப்பட்ட ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மற்றும் பல் மருத்துவக் கல்லூரி அரசு கல்லூரிகளின் கீழ் வகைப்படுத்தப்பட்டது சட்டவிரோதமானது.
மாணவர்களையும் அவரது பெற்றோரையும் தவறான முறையில் வழிநடத்திய இந்த செயல் சட்ட விரோதமானது. ஆனால் மருத்துவக் கல்வி இயக்குனரகத்தின் இயக்குநர் இதுவரை முறையான பதில் மனுவை தாக்கல் செய்யவில்லை. மனுதாரரின் மகளின் உரிமைகள் பறிக்கபட்டுள்ளது. மாணவியை மன உளைச்சலுக்கு ஆளாக்கியதற்காக மருத்துவக் கல்வி இயக்குனரகத்தின் இயக்குநருக்கு 5 லட்ச ரூபாய் அபராதமாக விதிக்கப்படுகிறது”
என்று உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார்.