மதுரை:

மதுரையில் வாக்குப்பதிவு இயந்திரம் வைக்கப்பட்டுள்ள அறையில் பெண் அதிகாரி நுழைந்ததாக சிபிஎம் கட்சி வேட்பாளர் குற்றஞ்சாட்டியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

மதுரை மக்களவை தொகுதி வாக்குப்பதிவுக்குப் பின் வாக்குப்பதிவு இயந்திரங்கள் சீல் வைக்கப்பட்டு 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

இந்நிலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளர் சு. வெங்கடேசன் நேற்று இரவு திடீர் குற்றச்சாட்டை எழுப்பினார்.

ஒரு பெண் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைக்குள் சென்றதாகவும், அங்கிருந்து ஆவணங்கள் எதையோ எடுத்துச் சென்றதாகவும் குற்றஞ்சாட்டினார்.

இது தொடர்பாக சிசிடிவி காட்சிப் பதிவுகளை தர வேண்டும் என்று அவர் கோரிக்கை வைத்தார். இதனையடுத்து, சுயேட்சை வேட்பாளர்களும் அங்கு குவிந்தனர்.

காவல்துறையினருடன் அவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளதால் பெறும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

சீல் வைக்கப்பட்டுள்ள அறைக்குள் பெண் அதிகாரி ஏன் சென்றார் என்ற கேள்விக்கு பதில் கிடைக்காததால், அரசியல் கட்சியினர் தொடர்ந்து கோஷம் எழுப்பி வருகின்றனர்.

கலெக்டர் நேரில் வந்து விளக்கம் தர வேண்டும் என கோரிக்கை வைத்து வருகின்றனர்.

இதற்கிடையே சம்பவ இடத்துக்கு நேரில் வந்த மதுரை ஆட்சியரும் தேர்தல் அதிகாரியுமான நடராஜன், “யாரோ வந்ததாக சொன்னார்கள். சிசிடிவி காட்சிகளை வேட்பாளர்களுக்கு காட்டினோம். வாக்குப் பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பாக உள்ளன. வேட்பாளர்களின் ஏஜெண்ட்கள் திருப்தியடைந்தனர்.

ஒரு அறையில் மட்டும் சீல் வைக்காமல் இருந்தது. அங்கும் சீல் வைக்க உத்தரவிட்டுள்ளேன்.
இது குறித்து விசாரிக்கப்படும்” என்றார்.